தைபே, தைவானில் உள்ள ‘மெட்ரோ’ ரயில் நிலையத்தின் கவுரவ ஸ்டேஷன் மாஸ்டராக பூனை ஒன்று நியமிக்கப்பட்ட சம்பவம், விலங்கு நல ஆர்வலர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கிழக்காசிய நாடான தைவானில் உள்ள சியாட்டோ சுகர் ரீபைனரி மெட்ரோ ரயில் நிலையத்தில் சுற்றித் திரியும் ஒரு பூனை இங்கு மிகவும் பிரபலம்.
‘மிஹான்’ என அழைக்கப்படும் இந்த பூனையை, ரயில் நிலையத்திற்கு வரும் பயணியர் மற்றும் இங்கு பணிபுரியும் ஊழியர்கள் கொஞ்சி, அதனுடன் விளையாடி மகிழ்வர்.
நாளடைவில் மிகவும் பிரபலமடைந்த மிஹானின் பெயரில், சமூகவலைத்தளமான ‘இன்ஸ்டாகிராமில்’ கணக்கு ஒன்றும் துவங்கப்பட்டது.
இதில், மிஹானின் செயல்பாடுகளை நாள்தோறும் புகைப்படங்களாகவும், ‘வீடியோ’க்களாகவும் பதிவேற்றுவது வழக்கம். இதனால் மிஹான் பூனையின் இன்ஸ்டாகிராம் கணக்கை, பின் தொடர்வோரின் எண்ணிக்கை 59 ஆயிரத்தை கடந்துள்ளது.
இந்நிலையில், கவுசியாங்கு மெட்ரோ ரயில் வழித்தடத்தின் 15ம் ஆண்டு விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது.
இதன் ஒரு பகுதியாக, பயணியர் இடையே புகழ்பெற்ற மிஹான் பூனையை, சியாட்டோ ரயில் நிலையத்தின் கவுரவ ஸ்டேஷன் மாஸ்டராக, தைவான் மெட்ரோ ரயில் நிர்வாகம் நியமித்தது.
ஏற்கனவே, ஐரோப்பிய நாடான பிரிட்டனின் வெஸ்ட் மிட்லேண்டில் உள்ள ரயில் நிலையத்தில் 2021ல் ஒரு பூனையை, தலைமை எலி பிடிப்பாளராக, அங்குள்ள ரயில்வே நிர்வாகம் நியமித்தது.
இதற்கு முன்னதாக, ஜப்பான் ரயில் நிலையத்தில் ஒரு பூனையை, ஸ்டேஷன் மாஸ்ட்ராக நியமித்தது குறிப்பிடத்தக்கது.