ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. கோடை விடுமுறை தொடங்கிய நிலையில் திருமலையில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் நிரம்பி வழிகின்றனர். திருப்பதிக்கு செல்ல நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி தேவஸ்தானம் விரிவான ஏற்பாடுகளை செய்துள்ளது.
திருப்பதி சாமி தரிசனம்
நாள்தோறும் நீண்ட வரிசையில் சாமி தரிசனம் செய்ய பக்தர்கள் பல மணி நேரம் காத்திருப்பதை பார்க்க முடிகிறது. ஏழுமலையானை தரிசிக்க 30 மணி நேரம் ஆவதாக கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது மேலும் காலதாமதம் ஆவதாக சொல்லப்படுகிறது. நாராயணகிரி பூங்கா முதல் பாறை வளைவு வரை பக்தர்கள் வரிசை நீண்டு கொண்டு செல்கிறது.
திருப்பதி ஏழுமலையான் தரிசனமா? நடந்தே வரும் பக்தர்களுக்கு ஒரு கண்டிஷன்… மிஸ் பண்ணிடாதீங்க!
அலைமோதும் பக்தர்கள்
மேலும் வைகுந்தம் கியூ காம்ப்ளக்ஸ், மாட வீதிகள், லட்டு பிரசாதம் வழங்கும் இடம், அன்னதான பிரசாத இடம், பேருந்து நிலையம், விடுதிகள், சாலை ஓரங்களில் பக்தர்கள் அதிக அளவில் தென்பட்ட வண்ணம் இருக்கின்றனர். இந்நிலையில் திருப்பதியில் இருந்து அலிபிரி மற்றும் ஸ்ரீவாரி மெட்டு வழியாக நடந்தே திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கும் நடைமுறை மீண்டும் அமலுக்கு வந்துள்ளது.
டிக்கெட் சேவை
தற்போது ஏழுமையான் தரிசனத்திற்கு அதிக அளவில் பக்தர்கள் வருவதால் விஐபி தரிசன அனுமதி குறைக்கப்பட்டுள்ளது. மேலும் இலவச தரிசன டோக்கன், 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் ஆகியவை வைத்திருப்பவர்கள் மட்டும் திருமலைக்கு வர வேண்டும். நேரடி இலவச தரிசனத்திற்கு வருவோர் சில நாட்களுக்கு வருவதை தவிர்க்குமாறு தேவஸ்தானம் கேட்டுக் கொண்டுள்ளது.
உண்டியல் வசூல்
தேவஸ்தானம் வெளியிட்டுள்ள தகவலின்படி, நேற்று மட்டும் 63,244 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 27,054 பேர் தங்கள் முடியை காணிக்கையாக வழங்கினர். 3.31 கோடி ரூபாய் உண்டியல் காணிக்கையாக கிடைத்துள்ளது. இந்நிலையில் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி முதல் பாஷ்யகாரா உற்சவத்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
உற்சவ நாட்கள்
வரும் மே 5ஆம் தேதி வரை மொத்தம் 19 நாட்கள் உற்சவம் நடைபெறுகிறது. முக்கிய நிகழ்ச்சியான பாஷ்யகர்லா சட்டுமோரா வரும் ஏப்ரல் 25ஆம் தேதி வைசாக மாதம் ஆருத்ரா நட்சத்திரத்தில் ஸ்ரீ ராமானுஜரின் பிறந்த நாளில் நடக்கிறது. அப்போது ஸ்ரீதேவி, பூதேவி சுவாமிகள் ஸ்ரீ மலையப்ப சுவாமி உடன் நான்கு மாட வீதிகளில் பவனி வருவர்.
இதுதொடர்பாக நடைபெறும் சிறப்பு பூஜைகள், அலங்கார, அபிஷேகங்கள், ஊர்வலங்கள் ஆகியவற்றை காண பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவர். இதற்கான சிறப்பு ஏற்பாடுகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.