தமிழக சட்டப்பேரவையில் கடந்த மாதம் 19-ஆம் தேதி வேளாண் பட்ஜெட்டை வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். தொடர்ந்து 21-ம் தேதி முதல் 24 -ம் தேதி வரை பட்ஜெட் மீது விவாதம் நடைபெற்று பேரவை கூட்டம் முடிவடைந்தது. இந்நிலையில் மானியக்கோரிக்கை மீதான விவாதம் கடந்த 6-ம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
சட்டப்பேரவையில் மின்சாரம், மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நேற்று நடந்தது. இந்தத் துறைகளுக்கான அமைச்சர் செந்தில் பாலாஜி பதிலளித்து புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அப்போது மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசுகையில், “தமிழகத்தில் விளைநிலங்களின் பரப்பை அதிகரித்து விவசாய உற்பத்தியை பெருக்கும் வகையில், நடப்பு 2023-24-ம் ஆண்டில் 50,000 புதிய விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும். இவை சாதாரண வரிசை, சுயநிதி திட்டம், சிறப்பு முன்னுரிமை, தத்கால், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி, மேம்பாட்டு கழகம் (தாட்கோ) ஆகிய திட்டங்களின் மூலம் வழங்கப்படும்.
கடந்த 2 ஆண்டுகளில் ஏற்கெனவே 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதனால் 2.99 லட்சம் ஏக்கர் பாசன பரப்பளவு அதிகரித்துள்ளது. 1.50 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.333 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது. 234 தொகுதிகளிலும் உள்ள விவசாயிகள் பயன்பெறும் வகையில் 1.50 லட்சம் இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அரசு, தனியார் பங்களிப்புடன் 5 ஆயிரம் மெகாவாட் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவப்படும்.
சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் சூரிய ஒளி ஆற்றல் அதிகமாக உள்ளதால் அங்கு அதிக அளவில் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையங்கள் நிறுவுவதற்கு வசதியாக புதிய 400 கிலோ வோல்ட், 230 கிலோ வோல்ட், 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும்.
மதுரை, கோவை, கரூர் மாநகராட்சி பகுதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் புதைவடங்களாக மாற்றப்படும். மின்பாதையில் ஏற்படும் பழுதுகளை கண்டறிய ட்ரோன்கள் கொள்முதல் செய்யப்படும்.
திருநெல்வேலி, ஸ்ரீரங்கம், கோயம்புத்தூர், அவிநாசி, திருப்பரங்குன்றம், திருச்செங்கோடு, கரூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களில் அமைந்துள்ள தேரோடு மாட வீதிகளில் செல்லும் மேல்நிலை மின் கம்பிகள் அனைத்தும் புதைவடங்களாக மாற்றி அமைக்கப்படும்.
மின் வாரிய ஊழியர்களுக்கான ஊதிய உயர்வு ஒப்பந்தம் நிறைவு செய்யப்படும், விடுபட்ட கேங்மேன்களுக்கு பணி வழங்குவது குறித்து குழு அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் இதற்கு தீர்வு ஏற்படுவதுடன், அவர்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கான இடமாறுதல் குறித்த அறிவிப்பும் விரைவில் வெளியாகும்.
ஸ்மார்ட் மீட்டர்கள் புதிய வடிமைப்பில் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட உள்ளன. இதற்கான விரிவான திட்ட அறிக்கை இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இப்பணி முடிந்ததும் 3 கோடி மின் நுகர்வோரின் வீடுகளுக்கு ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும்” என்றார்.