சென்னை: தமிழ்நாட்டில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, தேனி, நாகர்கோவில் உள்ளிட்ட 25 இடங்களில் காற்று தர கண்காணிப்பு நிலையம் 49 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் இன்று சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டசபை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.. துறை ரீதியான அறிவிப்புகளை வெளியிட்டு, அமைச்சர்கள் உரையாற்றியும், உறுப்பினர்களின் கேள்விக்கு பதிலளித்தும் வருகிறார்கள்.
அந்தவகையில், இன்றைய தினம், வனத்துறை சார்பில் அறிவிப்புகளை அமைச்சர் மதிவேந்தன் வெளியிட்டார்.. குறிப்பாக, நீலகிரி வரையாடுகளை அழிவில் இருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் உறுதி தெரிவித்துள்ளார்…
பல்லுயிர்கள்: இதுகுறித்து பேரவையில் பேசிய அமைச்சர், ” வனவிலங்குகளுக்கும், பறவைகளுக்கும், பல்லுயிர்களுக்கும் பல்வேறு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பசுமை தமிழ்நாடு இயக்கம் முதலமைச்சரால் தொடங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி அமைந்த பிறகு 13 ராம்சாட் தளங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. யானைகள் பாதுகாப்பிற்காக முதுமலை யானைகள் சரணாலயத்தை சீரமைக்க ரூ.7 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. வரும் காலங்களில் மின்சாரம் தாக்கி யானைகள் உயிரிழப்பது ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
பறவைகள் சரணாலயம் : திண்டுக்கல் வனக்கோட்டம் அய்யலூரில் தேவாங்கு பாதுகாப்பு மையம் ரூ. 20 கோடியில் அமைக்கப்படும்./ தஞ்சை மாவட்டம் மனோராவில் கடற்பசு பாதுகாப்பு மையம் ரூ.15 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும். பழவேற்காடு பறவைகள் சரணாலயத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சிப் பணிகள் ரூ.3.70 கோடியில் மேற்கொள்ளப்படும். அரியலூர் மாவட்டத்தில் உள்ள கரைவெட்டி பறவைகள் சரணாலயம் ரூ.1 கோடியில் புனரமைக்கப்படும். சதுப்பு நிலத்தை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த ரூ.20 கோடியில் பள்ளிக்கரணையில் பாதுகாப்பு மையம் அமைக்கப்படும்” என்றார்.
இதைத்தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையில் சுற்றுசூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதிலளித்துப் பேசிய அமைச்சர் மெய்யநாதன், “காற்றின் தரம் கடந்த காலங்களை விடத் தற்போது மீட்டெடுக்கபட்டுள்ளது. தமிழ்நாட்டில் தர்மபுரி, கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை உள்ளிட்ட 25 இடங்களில் காற்றுத் தரக் கண்காணிப்பு நிலையம் ரூ. 49 கோடி மதிப்பீட்டில் அமைக்க உள்ளது.
மெய்யநாதன்: குப்பைக் கிடங்குகள் மோசமான நிலையில் இருந்த நிலையில் நிலத்தையும் காற்றையும் அதிக மாசு பாதிப்பை ஏற்படுத்தி வந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 269 குப்பைக் கிடங்குகள் கண்டறியப்பட்டு அவற்றுள் 180 இடங்களில் பையோ மைனில் முறையில் குப்பைகள் அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் 132 ஏக்கர் உயிர் நிலம் மீட்கப்பட்டு 59,600 மரங்கள் நடப்பட்டுள்ளது. மரங்களின் மீது விளம்பரம் செய்வதற்காக ஆணி அடிப்பதைத் தவிர்க்க வேண்டும்” என்றார் மெய்யநாதன்.
இதையடுத்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை சார்ந்த 15 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மெய்யநாதன் வெளியிட்டார்… அந்த 15 அறிவிப்புகள் இவைதான்: கால நிலை மன்றங்கள், வழக்கமான மன்ற செயல்பாடுகளுடன் மேற்கொள்ளப்படுவதுடன் கலந்துரையாடல், அமர்வு, பரிசோதனை அடிப்படையில் கற்றுணர்தல், வினாடி வினா போட்டிகள் ஆகியவை நிகழ்த்தப்படும். கால நிலைக்கேற்ற வாழ்வியல் முறை என்ற திட்டம் 50 லட்சம் செலவில் தமிழ்நாடு அரசால் நடைமுறைப்படுத்தப்படும். பசுமை நகரக் குறியீடு ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
நாட்டு மரங்கள் : காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கான திட்டங்கள் மற்றும் தீர்வுகளுக்கு நிதி உதவி, பத்து கோடி மதிப்பீட்டில் ஒரு பசுமை நிதி உருவாக்கப்படும். ராஜபாளையம் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சிகளைக் கரிம மாசு இல்லாத நகராட்சிகளாக உருவாக்குதல். பசுமை பள்ளிக்கூடத் திட்டம் 2023-24-ம் ஆண்டிலும் தமிழ்நாட்டில் 10 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மேலும் 50 பள்ளிகளில் தலா 20 லட்சம் ரூபாய் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதலமைச்சரின் நீர்நிலை பாதுகாவலர் விருது- ஒரு கோடி செலவில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு குறுங்காடுகள் திட்டம் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்காக நாட்டு மரங்கள் கொண்ட ஆயிரம் குறுங்காடுகள் உருவாக்கப்படும்.
சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையம் அமைக்கப்படும். கழிவு உற்பத்தியாளர் மற்றும் பயனர்களுக்கு இடையே கழிவுகளைப் பரிமாறிக் கொள்வதற்கு இணையவழி கழிவு பரிமாற்றத் தலம் அமைக்கப்படும். சுழற்சி பொருளாதாரத்தில் குப்பை சேகரிப்பவர்களின் பங்களிப்பினை முதன்மைப்படுத்துவதற்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒரு கோடி செலவில் நிறைவேற்றப்படும். கடல்வாழ் பல் உயிரினங்களைப் பாதுகாக்கும் பொருட்டுப் பயன்படுத்தித் தூக்கி எறியப்படும் மீன்பிடி வலைகளைச் சேகரித்து மறு சுழற்சிக்கு அனுப்புவதற்கான திட்டம் ஒரு கோடி செலவில் நிறைவேற்றப்படும்.
மண் தரம் வரைபடம்: மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களுக்கு ஆய்வுகளுக்கான தேசிய அங்கீகாரம் வாரியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அங்கீகாரம் ரூபாய் மூன்று கோடி செலவில் பெறப்படும். தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் 8 மேம்படுத்தப்பட்ட சுற்றுச்சூழல் ஆய்வகங்களில் நுண்ணுயிர் பகுப்பாய்வு பிரிவு ரூபாய் 4 கோடி செலவில் ஏற்படுத்தப்படும். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாசினால் பாதிக்கப்பட்ட பகுதிகளின் மண் தரம் வரைபடம் ரூபாய் மூன்று கோடி செலவில் தயாரிக்கப்படும்.