வியட்நாம் நாட்டில், உடல் நலக்கோளாறு காரணமாக மருத்துவமனைக்கு வந்த பெண்ணை மருத்துவர்கள் பரிசோதித்தபோது, அவரின் உடலினுள் ஆங்காங்கே புழுக்கள் இருந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாதிக்கப்பட்ட பெண் முன்னதாக, பச்சை ரத்தத்தை சமைக்கப்பட்ட இறைச்சியுடன் சேர்த்து தயாரிக்கப்படும் உள்ளூர் உணவான ‘டைட் கேன் (Tiet canh)’ என்பதை அவரே வீட்டில் தயாரித்துச் சாப்பிட்டிருக்கிறார்.
அதன்பிறகு அவருக்கு அடிக்கடி கடுமையான தலைவலி ஏற்பட்டிருக்கிறது. பிறகு அந்தப் பெண், அருகிலுள்ள Dang Van Ngu மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவர்கள் அவரைப் பரிசோதித்து, உடலை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது, அவருடைய உடலில் கைகள், கால்களில் தோலுக்கடியில் புழுக்கள் திரண்டிருப்பது தெரியவந்திருக்கிறது. மூளையில்கூட புழுக்கள் குழுமியிருந்தன.
இருப்பினும் சரியான நேரத்தில் மருத்துவர்கள் அவருக்கு தகுந்த சிகிச்சையளித்து அவர் உயிரைக் காப்பாற்றினர். பின்னர் இது குறித்துப் பேசிய மருத்துவமனையின் துணை இயக்குநர் டாக்டர் டிரான் ஹுய் தோ (Tran Huy Tho), “முதலில் மருத்துவர்கள், அந்தப் பெண்ணுக்கு பக்கவாதத்தால் இப்படி ஏற்பட்டிருக்கலாம் என்று நினைத்தனர். ஆனால், அவரை ஸ்கேன் செய்துபார்த்ததில், உடலில் புழுக்கள் இருப்பது தெரியவந்தது.
பச்சை ரத்தத்தால் தயாரிக்கப்பட்ட உணவாலேயே இப்படி நேர்ந்திருக்கிறது என்பதை மருத்துவர்கள் உறுதிசெய்தனர். ஒருவேளை இதனைக் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தால், அவர் இறந்துகூட போயிருக்கலாம். நல்ல வேளை மருத்துவர்கள் தகுந்த சிகிச்சையளித்து அவரைக் காப்பாற்றினர்” என்றார்.
பிறகு இது தொடர்பாக உள்ளூர் ஊடகத்துடன் பேசிய அந்தப் பெண், “அந்த உணவை நானே தயாரித்தால் சுத்தமாக இருக்கும் என்று நினைத்து அப்படி செய்துவிட்டேன்” என்று தெரிவித்திருக்கிறார்.