ஆபாச நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கு – நஷ்டஈடு கோரி தனது முன்னாள் வக்கீல் மீது வழக்கு தொடர்ந்த டிரம்ப்

வாஷிங்டன்,

அமெரிக்க முன்னாள் அதிபரான டிரம்ப் மீது 10-க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் புகார் தெரிவித்ததோடு, வீடியோ ஆதாரங்களையும் வெளியிட்டு இருந்தனர். இதனிடையே ஆபாச பட நடிகை ஒருவர் டிரம்புடனனான உறவு குறித்து அவர் வெளியிட்ட புத்தகத்தில் பதிவு செய்திருந்தார்.

இந்த குற்றச்சாட்டை எல்லாம் டிரம்ப் திட்டவட்டமாக மறுத்தாலும், கடந்த 2016-ம் ஆண்டு, ஜனாதிபதி தேர்தல் சமயத்தில், இந்த குற்றச்சாட்டு வெளியாகியிருந்தது. அதனால், அதன் தாக்கம் தேர்தலில் அதிகமாக எதிரொலித்தது.

அதிபர் தேர்தல் நடைபெற இருந்த சூழலில் ஆபாசபட நாயகியுடனான பழக்கம் வைரலான நிலையில், அது டிரம்பிற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ஆபாச பட நடிகையை பேச விடாமல் செய்ய 1 லட்சத்து 30 ஆயிரம் அமெரிக்க டாலர்கள் டிரம்ப் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த தொகையை டிரம்ப் தனது முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் மூலம் நடிகைக்கு கொடுத்ததாகவும், பின்னர் அந்த தொகையை தேர்தல் பிரசார நிதியில் இருந்து எடுத்து வக்கீலுக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக வக்கீல் மைக்கேல் கோஹன் அளித்த சாட்சியத்தின் அடிப்படையில் டிரம்ப் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கின் விசாரணைக்காக நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் கோர்ட்டில் நேரில் ஆஜரான டிரம்ப், அமெரிக்க சட்டவிதிகளின்படி கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணையின் போது டிரம்ப் தன் மீது சுமத்தப்பட்ட 34 குற்றச்சாட்டுகளையும் மறுத்தார். தொடர்ந்து இந்த வழக்கில் இருந்து டிரம்ப் ஜாமீனில் விடுதலையானார்.

இந்த நிலையில் தனது முன்னாள் வக்கீல் மைக்கேல் கோஹன் மீது டிரம்ப் மான நஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார். புளோரிடாவில் உள்ள அமெரிக்க மாவட்ட கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அதில் மைக்கேல் கோஹன் தன்னை பற்றி பொய்களை பரப்புவதாகவும், நற்பெயருக்கு தீங்கு விளைவித்ததாகவும் டிரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், மைக்கேல் கோஹனின் தொடர்ச்சியான மற்றும் முறையற்ற நடத்தை உச்சத்தை எட்டியுள்ளதால் சட்டப்பூர்வ தீர்வை தேடுவதை தவிர தனக்கு வேறு வழியில்லை என்றும், இது தொடர்பாக விசாரணை நடத்தி 500 மில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.4 ஆயிரம் கோடி) நஷ்ட ஈடு வழங்க உத்தரவிட வேண்டும் என்றும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.