சென்னை : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சிறப்பான பல படங்களை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரது அடுத்தடுத்த படங்கள் வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
நாளைய தினம் ஐஸ்வர்யா ராஜேஷின் சொப்பன சுந்தரி படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இந்தப் படத்தை இயக்குநர் சார்லஸ் டைரக்ட் செய்துள்ளார்.
நாயகிக்கு முக்கியத்துவம் தரும் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிட்சன் உள்ளிட்ட படங்களை தொடர்ந்து சொப்பன சுந்தரி படமும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் நாளைய தினம் வெளியாகவுள்ளது.
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் : நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நாயகிக்கு முக்கியத்துவம் தரும் கேரக்டர்களாக தேடிப்பிடித்து நடித்து வருகிறார். தன்னுடைய ஆரம்ப காலகட்டத்திலேயே காக்கா முட்டை என்ற படத்தில் சேரிப்பெண்ணாக, இரண்டு குழந்தைகளுக்கு தாயாக தன்னுடைய கேரியரை துவக்கி அதிரடி கிளப்பினார். தொடர்ந்து தான் நடிக்கும் கேரக்டர்கள் மிகவும் சிறப்பாக அமையும்படி பார்த்துக் கொள்கிறார். மற்ற நடிகைகளுக்கு கிடைக்காத சிறப்பான கேரக்டர் இவருக்கு தொடர்ந்து கிடைத்து வருகிறது.
சமீபத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் டிரைவர் ஜமுனா, தி கிரேட் இந்தியன் கிட்சன் போன்ற படங்கள் வெளியாகி அவருக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்தன. இந்தப் படங்களை தொடர்ந்து நாளைய தினம் சொப்பன சுந்தரி படம் ரிலீசாக உள்ளது. த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படத்தில், தங்க நகைக்கடை மூலமாக கிடைக்கும் கார் மற்றும் அதையொட்டிய சம்பவங்கள் கதைக்களங்களாக உள்ளன.
படத்தில் தீபா, லட்சுமி, ரெடின் கிங்ஸ்லி உள்ளிட்டவர்களும் நடித்துள்ளனர். கருணாகரன் இந்தப் படத்தில் நெகட்டிவ் ஷேடில் கவனம் ஈர்க்கிறார். படத்தில் அதிகமான கவனம் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் கேரக்டரின்மீது ஏற்றி வைக்கப்பட்டுள்ளது. இந்த கவனத்தை மற்ற கேரக்டர்களுக்கும் கடத்த இயக்குநர் முற்படாதது ஆதங்கத்தையே ஏற்படுத்துகிறது. படத்திற்கு பலமாக அஜ்மலின் இசை அமைந்துள்ளது. சொப்பன சுந்தரி படம் நாளைய தினம் வெளியாகவுள்ள சூழலில், ரசிகர்களிடையே எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்தப் படத்தின் ட்ரெயிலரில் வெளியான கண்டிப்பா ரேப் பண்ணிடுங்க சார் என்ற டயலாக்கை பேச தான் மிகவும் யோசித்ததாகவும் ஆனால், இயக்குநர் தன்னை சமாதானப்படுத்தி பேச வைத்ததாகவும் தனது சமீபத்திய பேட்டியில் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்திருந்தார். ஆனால் தற்போது படத்துடன் சேர்த்து பார்க்கையில் அந்த டயலாக்கின் முக்கியத்துவம் தனக்கு தெரியவந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில், படத்தின் பிரமோஷனுக்காக பேசிய ஐஸ்வர்யா ராஜேஷ், நம்மை மேலே கைத்தூக்கி விடுவதற்கு யாருமே இருக்க மாட்டார்கள் என்றும் ஒன்றிரண்டு பேர் இருக்கலாம் என்றும் கூறியுள்ளார். மேலும் நம்மை தூக்கிப் போட்டு மிதிப்பதற்கு, கீழே போடுவதற்கு நிறைய பேர் இருப்பார்கள் என்றும் அதையெல்லாம் தாண்டி வளர்வதுதான் நமக்கான சவாலாக இருக்கும் என்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.