புதுடெல்லி: மத்திய அரசுத் துறைகளில் நியமிக்கப்பட்டுள்ள 71 ஆயிரம் பேருக்கு, பணிக்கான நியமன ஆணைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று காணொலி மூலம் வழங்கினார்.
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலுக்கு முன்பாக 10 லட்சம் பேருக்கு ‘ரோஜ்கார் மேளா’ திட்டத்தின் கீழ் மத்திய அரசுப் பணி வழங்கப்படும் என பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிவித்தார்.
இந்த திட்டத்தின்படி, மத்திய அரசின் துறைகளுக்கு நியமிக்கப்படும் பணியாளர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பணி நியமன ஆணைகளை பிரதமர் வழங்கி வருகிறார். அந்த வகையில், நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 71,506 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கும் நிகழ்ச்சியை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.
நாடு முழுவதும் 45 இடங்களில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் மற்றும் உயரதிகாரிகள் பங்கேற்று, பணி நியமன ஆணைகளை நேரில் வழங்கினர். இந்நிகழ்ச்சியில், பிரதமர் மோடியின் வீடியோ உரை ஒளிபரப்பப்பட்டது. அதில் பிரதமர் பேசியதாவது:
வைசாகி புனித நாளில், மத்திய அரசின் பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெற்றுள்ள 71 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் பாஜக ஆளும் மாநிலங்களில் அரசு வேலை வழங்கும் நடைமுறை வேகமாக நடைபெறுகிறது. மத்திய பிரதேசத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோ ருக்கு ஆசிரியர் பணிக்கான நியமன ஆணை வழங்கப் பட்டுள்ளது.
இந்தியாவை வளர்ந்த நாடாக உருவாக்க வேண் டும் என்ற தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்ற, திறமையான மற்றும் ஆற்றல்மிக்க இளைஞர்களுக்கு சரியான வாய்ப்பை வழங்க அரசு கடமைப்பட்டுள்ளது.
சுயசார்பு இந்தியா திட்டம், நாடு முழுவதும் உள்ள கிராமங்கள் மற்றும் நகரங்களில் ஏராளமான வேலைவாய்ப்பை உருவாக்கி வருகிறது. குறிப்பாக, பொம்மை தயாரிப்புத் துறை வளர்ச்சி அடைந்து வருகிறது. இதனால், புதிய வேலைவாய்ப்புகள் உருவாகின்றன.
பொருளாதாரத்தில் உலகிலேயே மிகவும் வேகமாக வளரும் நாடாக இந்தியா மாறியுள்ளது. புதிய கொள்கைகள், வியூகங்களுடன் புதிய இந்தியாவை நோக்கி நாம் பயணிக்கிறோம். தொழில்நுட்பம், உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.
குறு, சிறு நிறுவனங்களுக்கு முத்ரா திட்டத்தின் கீழ் சுலபமாக கடன் வழங்கப்படுகிறது. இதனால் 8 கோடிக்கும் மேற்பட்ட புதிய தொழில்முனைவோர் உருவாகி உள்ளனர். அரசின் கொள்கைகள், வியூகங்கள் புதிய வாய்ப்புகளுக்கான கதவைத் திறந்துள்ளது. ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மூலம் நேரடியாகவும், மறைமுகமாகவும் 40 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது.
2014-ல் பாஜக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு வரை, 20 ஆயிரம் கி.மீ. தொலைவு ரயில் பாதை மட்டுமே மின்மயமாகி இருந்தது. கடந்த 9 ஆண்டுகளில் இது 40 ஆயிரம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. இதேபோல, 2014 வரை 4 லட்சம் கிலோமீட்டராக இருந்த ஊரகச் சாலைகளின் நீளம், தற்போது 7.25 லட்சம் கிலோமீட்டராக அதிகரித்துள்ளது. மேலும், விமான நிலையங்களின் எண்ணிக்கை 74-ல் இருந்து 148-ஆக அதிகரித்துள்ளது.
முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிறு கடன்கள், பொருளாதாரத்தின் அடித்தளத்தை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றுகின்றன. ஆனால், பெரிய பொருளாதார நிபுணர் என்று கூறிக்கொள்பவரும் (ப.சிதம்பரம்), தொலைபேசி மூலம் பெரிய தொழிலதிபர்களுக்குக் கடன் வழங்கியவருமான ஒருவர் முத்ரா திட்டத்தைக் கேலி செய்கிறார். மக்களின் திறமைகளை அவர் புரிந்துகொள்ளவில்லை. இவ்வாறு பிரதமர் பேசினார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம், “முத்ரா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.50 ஆயிரம் கடனைக் கொண்டு, என்ன தொழிலைத் தொடங்க முடியும்?” என சமீபத்தில் கேள்வி எழுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.