சென்னை: தமிழ்ப் புத்தாண்டுக்கு என்னென்ன மாதிரியான உணவுகளை மக்கள் படைப்பார்கள் தெரியுமா? கனி காணுதல் என்றால் என்ன?
தமிழ்ப் புத்தாண்டு ஆண்டுதோறும் ஏப்ரல் 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த புது வருட பிறப்பானது சித்திரை விஷு என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பண்டிகை தமிழகம் மட்டுமல்லாமல் அஸ்ஸாம், பஞ்சாப், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது.
சுபகிருது ஆண்டு ஏப்ரல் 13 ஆம் தேதியுடன் முடிந்து சோபகிருது ஆண்டு தொடங்குகிறது. ஆங்கில புத்தாண்டான ஜனவரி 1 ஐ காட்டிலும் பெரும்பாலானோர் ஏப்ரல் 14 ஐ தான் தமிழ்ப்புத்தாண்டாக கொண்டாடுவர். சூரியன் மேஷ ராசியில் நுழைவதை வைத்தும் தமிழ் ஆண்டின் கால அளவு பின்பற்றப்படுகிறது.
புத்தாடைகள்: அன்றைய தினம் புத்தாடைகளை உடுத்தி கோயிலுக்கு செல்வர். பிறகு வீடு, வாசலை சுத்தம் செய்து பூஜை சாமான்களை தேய்த்து பொட்டு வைத்து பூஜை செய்வது வழக்கம். இந்த நன்னாளில் நாம் செய்யும் செயல்கள் அனைத்து இந்த ஆண்டு முழுவதும் நமது வாழ்க்கையை செழிப்பாக்கும் என்பது பெரியோர் கூற்று. இந்த விழாவுக்கு வீட்டு வாசல்களில் தோரணம் கட்ட வேண்டும்.
அரிசி மாவு கோலம்: மாக்கோலம் இட வேண்டும். இந்த பண்டிகைக்கு படைப்பது என்றால் கனிகளைத்தான் படைப்பார்கள். அதாவது ஒரு தட்டில் முதல் நாள் இரவே மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை வைக்க வேண்டும். இவை மட்டுமல்லாமல் மற்ற பழங்களையும் வைக்கலாம். வெற்றிலை பாக்கு வைத்து வீட்டில் இருக்கும் தங்கத்தையும் வைக்க வேண்டும்.
அறுசுவை: புத்தாண்டு தினத்தன்று காலை குளித்துவிட்டு இனிப்பு, கசப்பு, உப்பு, காரம், துவர்ப்பு, புளிப்பு ஆகிய 6 சுவைகளை கொண்ட உணவை அருந்துவது சிறப்பானது. இதற்காக 6 சுவைகளையும் தனித்தனியாக சமைக்காமல் ஒரே டிஷ்ஷாக மாங்காய் பச்சடியை செய்வர். மாங்காய் பச்சடியில் வெல்லம், வேப்பம்பூ, உப்பு, மிளகாய் தூள் ஆகியவை போட்டு படைப்பது. இதில் மாங்காயில் புளிப்பு சுவையும் அதன் தோலில் துவர்ப்பு சுவையும் இருக்கும். வேப்பம்பூவில் கசப்பு, உப்பு சேர்ப்பதால் உவர்ப்பு, வெல்லம் சேர்ப்பதால் இனிப்பு, மிளகாய் தூளில் காரம் இருக்கும்.
கல் உப்பு வாங்குவது நல்லது: இந்த நன்னாளில் குரு ஓரையில் தங்க நகைகளை வாங்கலாம். சுக்கிர ஓரையில் வெள்ளி நகைகளை வாங்கலாம். குங்குமம், வெற்றிலை, பாக்கு, பழம், ஆகியவற்றை வைத்து சில ரூபாய் நோட்டுகளையும் வைத்து கண்ணாடி மூலம் அந்த பழங்களையும், தங்கம், வெள்ளி நகைகளையும் பணத்தையும் பார்ப்பது உண்டு. சிலர் தங்கம், வெள்ளி வாங்க முடியாவிட்டாலும் கல் உப்பை வாங்கி வைப்பது வழக்கம்.