புதுடெல்லி: முன்னாள் தமிழக முதல்வரான எடப்பாடி பழனிசாமி, டெல்லி உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு அளித்திருந்தார். அதில் அவர், தன்னை அதிமுகவின் பொதுச் செயலாளராக அங்கீகரிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனக் கோரியிருந்தார். இந்த விவகாரம் தொடர்பாக10 நாட்களுக்குள் முடிவெடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை மத்திய தேர்தல் ஆணையம் அங்கீகரிக்கக் கூடாது என்று கூறி ஓ.பன்னீர்செல்வம் தரப்பைச் சேர்ந்த கொள்கை பரப்பு செயலாளரான புகழேந்தி டெல்லியில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அவர், கடந்த ஆண்டு ஜூலை 11-ம் தேதி எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்ட தீர்மானங்களை அங்கீகரிக்க கூடாது என குறிப்பிட்டுள்ளார்.
அதிமுக என்ற கட்சி தற்போதும் ஒருங்கிணைப்பாளர் என்ற தலைமையின் கீழ் தான்செயல்பட்டு வருகிறது. ஒருங்கிணைப்பாளராக உள்ள ஓபிஎஸ்தான் உண்மையான அதிமுக என்றும், கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் கையெழுத்திடும் வேட்பாளரின் வேட்பு மனு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என தேர்தல் ஆணையத்திடம் புகழேந்தி வலியுறுத்தியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி, தன்னிடம் தான் கட்சி உள்ளது என்று கர்நாடக தேர்தலை கருத்தில் கொண்டு உடனே அங்கீகாரம் வழங்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கிறார். இந்த அழுத்தம் மூலம் தேர்தல் ஆணையத்தை தவறாக வழிநடத்த அவர் முயல்கிறார். பொதுச்செயலாளர் தேர்வு மட்டுமில்லாமல் அதிமுக செயற்குழு கூட்டத்தை எதிர்த்தும் தொடரப்பட்ட 18 வழக்குகளும் சென்னை உயர்நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ளன. எனவே, இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமாக முடிவெடுக்க கூடாது என்று அவர் தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில் கடந்த 2013 மற்றும் 2018-ல் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்ட அதிமுகவின் வேட்பாளர்கள் காப்புத்தொகையை இழந்தனர். இவற்றில் 2018 தேர்தலுக்குப் பிறகு இரட்டை இலை முடக்கப்பட்டிருந்தது. இச்சூழலில், மீண்டும் கர்நாடகா தேர்தலை முன்னிறுத்தி இரட்டைஇலை சின்னத்தை எடப்பாடி பழனிசாமி பெற முயல்வதாகக் கருதப்படுகிறது. இதற்கு தடை ஏற்படுத்தும் வகையில் புகழேந்தி மூலமாக மத்திய தேர்தல் ஆணையத்திடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.