ஏப்ரல் 14- சித்திரை 1-ந் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினமாக கொண்டாடப்படுகிறது. அதேநேரத்தில் தனித் தமிழ் இயக்கத்தாரும் திராவிட இயக்கத்தாரும் தை 1-ந் தேதி ஜனவரி 14-ந் தேதிதான் தமிழர் புத்தாண்டு என கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். தமிழர் புத்தாண்டு சித்திரை 1 அல்லது தை 1 என்பது தொடர்பான சர்ச்சை பெருங்காலமாகவே தொடரத்தான் செய்கிறது.
சிந்துவெளி ஆய்வாளர் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ் அவர்கள் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசுகையில், சுமேரியர்கள் பிரமிடுகளைக் கட்டிக் கொண்டிருந்த காலத்தில் சிந்துசமவெளி மக்கள் நகர வாழ்வியலின் உச்சத்தில் வாழ்ந்தனர் என ஆதாரங்களை அடுக்கி இருப்பார். சிந்துசமவெளி, மொகஞ்சதாரோவும் கீழடி, கொடுமணல், ஆதிச்சநல்லூர் வகையறாக்களும் ஒன்றேதான் என்பதை நிரூபிக்க அப்பப்பா ஆதாரங்கள் வந்து கொண்டேதான் இருக்கின்றன. தமிழர் நிலக்கீழ் எங்கும் அத்தனை சரித்திரங்களின் சாட்சியங்கள் புதையுண்டு கிடக்கின்றன.
இப்படி பெருவாழ்வும் செழுமையும் கோலோச்ச வாழ்ந்த தமிழர் பெருங்கூட்டம் காலம் என்பதை எப்படி கையாள்வது என்பதை அறியாமலா இருந்திருப்பர்? இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின் பனி என்பது தமிழர் பின்பற்றிய 6 வகையான காலநிலைப் பருவங்கள். நொடி, நாழிகை, நாள் என்பது தமிழர் காலக் கணிப்பு. பழந்தமிழர் காலக் கணிப்புகளில் கை தேர்ந்தவராக திகழ்ந்தனர். கணியன் என்பவர் காலக் கணிப்பை மேற்கொண்டவர். வள்ளுவர் என்போர் காலக் கணிப்புகளில் திறமை பெற்றவராக இருந்தனர். இளவேனில் காலத்தின் தொடக்கம்தான் தமிழர் ஆண்டின் தொடக்கம்; அதாவது தை மாதம்தான் இளவேனில் காலம். ஆகையால் இளவேனில் தொடங்கும் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என கடைபிடிக்கப்பட்ட வாழ்வுமுறை தமிழருக்கு உரியது.
சித்திரை பிறப்பு எப்போது தமிழர் வாழ்வியலில் நுழைந்தது? வட நாட்டு ஆரியர்கள் பின்பற்றிய சித்திரை முதல்நாளே (முதுவேனில் பிறப்பு) ஆண்டு பிறப்பு என்பது கூட பழந்தமிழர் வாழ்வில் ஒட்டிக் கொண்டது என்பதற்கு நெடுநல்வாடை உள்ளிட்ட இலக்கியங்கள் சாட்சியமாக இருக்கின்றன. ஆவணியை கூட தமிழர் புத்தாண்டு நாளாக கொண்டாடியதற்காக சங்க கால பாடல்களும் விவாத சந்தையில் களமிறக்கப்படுவதும் உண்டு.
சித்திரை- 1 தமிழ்ப் புத்தாண்டு; தை-1 தமிழ்ப் புத்தாண்டு என்பதில் தமிழர்களுக்குள் இன்னமும் தொடர் கருத்து மோதல்கள் உண்டு. ஆரியர்கள் அப்படி ஒன்றும் வானியல் அறிஞர்கள் அல்ல. தமிழர்கள் சித்திரையைத்தான் கடைபிடித்தனர்; அதனையே ஆரியம் தன்மயமாக்கிக் கொண்டது என்போரும் உண்டு. அறுவடைக்கு நன்றி தெரிவித்து கொண்டாடும் நாளான தை-1 எப்படி ஆண்டு தொடக்கமாக இருக்க முடியும் என்கிற வாதமும் உண்டு.
சித்திரை, தை தமிழ்ப் புத்தாண்டு விவாதங்களில் எப்போதும் பாரதிதாசனுக்கு இடம் உண்டு.
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே
அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
தையே முதற்றிங்கள்; தைம்முதல் ஆண்டு முதல் பத்தன்று நூறன்று; பன்னூறன்று பல்லாயிரத்தாண்டாய் தமிழர் வாழ்வில் புத்தாண்டு தைம்முதல்நாள் பொங்கல் நன்னாள்
நித்திரையில் இருக்கும் தமிழா
சித்திரை அல்ல உனக்குத் தமிழ்ப் புத்தாண்டு
அண்டிப் பிழைக்க வந்த ஆரியர் கூட்டம் காட்டியதே”
“அறிவுக்கு ஒவ்வாத அறுபது ஆண்டுகள்
தரணி ஆண்ட தமிழருக்கு
தை முதல் நாளே தமிழ்ப்புத்தாண்டு
இப்படி எல்லாம் பாரதிதாசன் பாடல்களுடன் தை முதல்நாளே என பல்லவி பாடுவது உண்டு.
அதேநேரத்தில் தை முதல் நாளே தமிழர் புத்தாண்டு என்கிற பாரதிதாசன்,
சித்திரை வைகாசி ஆணி ஆடி ஆவணி
புரட்டாசி ஐப்பசி கார்த்திகை மார்கழி
ஒத்து வரும் தை மாசி பங்குனி எல்லாம் – இவை
ஓராண்டின் பன்னிரண்டு திங்களின் பெயர் என சித்திரையை தொடக்கமாகவே வைத்து ஏன் எழுதினார் என்கிற எதிர்வாதம் வைப்பதும் உண்டு.
இவர்களுக்கு அப்பால் சாலிவாகனன் என்ற வடநாட்டான் உருவாக்கியதுதான் இந்த சித்திரை ஆண்டுப் பிறப்பு என்பதும் 60 ஆண்டுகள் பிறந்த சோ கால்ட் ஆன்மீக வரலாறு அதாவது அபிதான சிந்தாமணி போன்ற நூல்களில் எழுதப்பட்ட 60 ஆண்டுகால வரலாறு என்பது அறிவியலுக்கும் தமிழர் வாழ்வியலுக்கும் பொருந்தா ஆபாசக் கதைகள் என திரவிடர் கழகத்தார் ஆணித்தரமாக வாதிடுவதும் தமிழர் நிலத்தில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
அதாவது சித்திரை-1 தமிழ்ப் புத்தாண்டு என ஏற்றுக் கொண்டால் 60 ஆண்டுகால முறையை ஏற்க வேண்டும். ஆனால் அந்த 60ஆண்டுகளின் பெயர்களில் ஒன்றுகூடத் தமிழ் இல்லை.60 ஆண்டுகளின் பெயர்கள், கிருஷ்ணனும் நாரதரும் கலவி செய்து பெற்ற பிள்ளைகள் என்கிறது புராணம். ஆகையால் என்னதான் சங்க இலக்கியங்கள் சொல்லி இருந்தாலும் சித்திரை -1 தமிழர் புத்தாண்டு என ஆதித் தமிழரும் சிந்துசமவெளித் தமிழரும் கொண்டாடி வாழ்ந்ததற்கு அறுதியிட்டு சொல்லும் ஆதாரம் ஏதும் உண்டா? என்பதற்குதான் பதிலேதும் இன்று வரை இல்லை.