பதிண்டா: பஞ்சாப் ராணுவ முகாமில் தாக்குதல் நடத்தியர்கள் யார் என தெரியாத நிலையில், நேற்று முன்தினம் பாதுகாப்பு பணியில் இருந்த மற்றொரு வீரர் துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளார்.
பஞ்சாப் பதிண்டா ராணுவ முகாமில் கடந்த வாரம், இன்சாஸ் ரக துப்பாக்கி மற்றும் 28 குண்டுகள் மாயமாகின. இந்நிலையில் பதிண்டா ராணுவ முகாமில் நேற்று முன்தினம் அதிகாலை 4.30 மணியளவில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தது. இதில் ஒரு அறையில் தூங்கிக் கொண்டிருந்த சாகர் பேன்னி (25), யோகேஷ் குமார் (24) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தனர். மற்றொரு அறையில் சந்தோஷ் எம். நகரல் (25) மற்றும் கமலேஷ் (24) என்ற இரண்டு வீரர்களும் இறந்து கிடந்தனர். இவர்களில் சாகர் பேன்னி, சந்தோஷ் எம்நகரல் ஆகியோர் கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள். கமலேஷ் மற்றும் யோகேஷ் ஆகியோர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். இதையடுத்து உடனடியாக அங்கு அதிரடிப் படையினர் விரைந்து சென்று தேடுதல் வேட்டை நடத்தினர்.
ஆனால், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் யார் எனத் தெரியவில்லை. தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி கடந்த வாரம் காணாமல் போன துப்பாக்கி என தெரியவந்துள்ளது.
இதுகுறித்து போலீஸாரும், ராணுவத்தினரும் விசாரணை நடத்தினர். இது தீவிரவாத தாக்குதல் இல்லை, ராணுவ முகாமில் சக வீரர்கள் நடத்திய தாக்குதல் என கூறப்பட்டது. அங்கிருந்த வீரர்களிடம் நடத்திய விசாரணையில், தாக்குதல் நடத்தியவர்களை பார்த்ததாக ஒரு வீரர் கூறியுள்ளார். தாக்குதல் நடத்திய 2 பேர் வெள்ளை நிற குர்தா மற்றும் பைஜாமா அணிந்திருந்ததாகவும், முகத்தை துணியால் மறைத்திருந்தாகவும் தெரிவித்துள்ளார். தாக்குதல் நடத்திய இருவரும் ராணுவ முகாம் அருகேயுள்ள காட்டு பகுதிக்குள் சென்றதாகவும் அந்த வீரர் கூறியுள்ளார்.
இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாக, அடையாளம் தெரியாத 2 பேர் மீது பஞ்சாப் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
பதிண்டா ராணுவ முகாமில் நேற்று முன்தினம் மாலை 4.30 மணியளவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வீரர் ஒருவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டு இறந்துள்ளார். இவர் விடுமுறையில் இருந்து கடந்த 11-ம் தேதி ராணுவ முகாமுக்கு திரும்பியுள்ளார். இது தற்கொலையாகவும் இருக்கலாம் அல்லது தற்செயலாக நடந்த சம்பவமாகவும் இருக்கலாம் என ராணுவ தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆனால் குண்டு தலையில் பாய்ந்துள்ளது. இந்த சம்பவத்துக்கும், காலையில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என ராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இதனால் பதிண்டா ராணுவ முகாமில் நடைபெற்ற சம்பவங்கள் மர்மமாகவே உள்ளன.