ஆஆ.. அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியல்.. கறாராக சொன்ன அண்ணாமலை.. உற்று கவனிக்கும் அதிமுக!

சென்னை:
“ஊழல் என்று வந்துவிட்டால் ஒரு கட்சியோடு நின்றுவிடக் கூடாது.. எனவே, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த அனைத்து கட்சிகளின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன்” என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவின் ஊழல் பட்டியலை ஏப்ரல் 14-ம் தேதி வெளியிடுவேன் என பல மாதங்களுக்கு முன்பே கூறி புயலை கிளப்பினார் பாஜக தலைவர் அண்ணாமலை. இதனால் அனைத்துத் தரப்பினர் மத்தியிலும் இதுதொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்தது. இந்நிலையில், சென்னை பாஜக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, திமுக ஊழல் பட்டியலை வெளியிடுவதாக கூறி சில முக்கிய அமைச்சர்களின் சொத்துப் பட்டியலை வெளியிட்டார்.

இதனைத் தொடர்ந்து, திமுகவினர் நீண்டகாலமாக கேட்டு வரும் தனது ரபேல் வாட்ச் பில்லையும் அவர் வெளியிட்டார். அதன் பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: இன்று நான் வெளியிட்டது விஷயங்கள் பார்ட் 1 தான். இத்துடன் இது முடிவடைய போவதில்லை. விரைவில் பார்ட் 2 வெளியிடப்படும். அதில் யார் யார் எவ்வளவு கறுப்புப் பணம் வைத்திருக்கிறார்கள் என்ற விவரங்கள் இடம்பெறும்.

ஊழலை எதிர்க்கிறோம் என்றால் அதன் அடிப்படையையே எதிர்க்க வேண்டும். திமுக என்ற ஒரே கட்சியுடன் அது நின்றுவிடக் கூடாது. தமிழ்நாட்டில் எந்தெந்த கட்சிகள் ஆட்சியில் இருந்ததோ, அந்த அனைத்து கட்சிகளின் ஊழலை பற்றி பேச வேண்டும். 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக இது பற்றி நான் பேசுவேன். ஆட்சியில் இருந்த கட்சிகளின் ஊழல் பட்டியல் வெளியிடப்படும். நான் முன்னெடுத்திருப்பது ஊழலுக்கு எதிரான போராட்டம். என்னை யாராலும் தடுக்க முடியாது. இது ஊழலுக்கு எதிரான போராட்டம். தைரியம் இருப்பவர்கள் என்னை மாற்றுங்கள்.

தேர்தலில் தோல்வி அடைவது குறித்து எனக்கு கவலை இல்லை. ஊழலை எதிர்க்க வேண்டும் என்பதுதான் எனது லட்சிம். இன்னும் 10 தேர்தல்களில் தோல்வி அடைந்தாலும் கூட பரவாயில்லை. ஊழலை எதிர்க்கும் போராட்டத்தில் இருந்து பின்வாங்க மாட்டேன். நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பாக அனைத்துக் கட்சிகளின் ஊழல் பட்டியல்களும் வெளியாகும். இவ்வாறு அண்ணாமலை பேசினார்.

இதனிடையே, அண்ணாமலை இவ்வாறு கூறியிருப்பது அதிமுகவினருக்கு நெருடலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. ஏனெனில், தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கட்சிகள் என்றால் அது திமுகவும், அதிமுகவும்தான். எனவே அதிமுகவின் ஊழல் பட்டியலையும் வெளியிடுவேன் என்றுதான் சொல்லாமல் சொல்கிறார் அண்ணாமலை. கூட்டணியில் இருக்கும் போதே நம்மை தாக்கும் வகையில் அண்ணாமலை பேசுகிறாரே அதிமுக சீனியர்கள் கோபத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, தமிழகத்தில் அதிமுக – பாஜக உறவில் விரிசல் உருவாகி வரும் நிலையில், அண்ணாமலையின் இந்த ‘ஸ்டேட்மெண்ட்’ மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.