புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் ராஷ்டிரிய ஜனாத தள தலைவர் லாலு பிரசாத் மகள் சந்தா யாதவிடம் அமலாக்கத் துறை நேற்று விசாரணை நடத்தியது.
ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் கடந்த 2004 முதல் 2009-ம் ஆண்டு வரை ரயில்வே அமைச்சராக பதவி வகித்தார். அப்போது ரயில்வே துறையில் வேலை வழங்க லாலுவும் அவரது குடும்பத்தினரும் நிலங்களை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது. சுமார் 4,000 பேரிடம் நிலங்களை பெற்று அவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கியதாகக் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிபிஐ, அமலாக்கத் துறை விசாரணை நடத்தி வருகின்றன.
இந்த ஊழல் தொடர்பாக கடந்த மே, ஆகஸ்ட் மாதங்களில் லாலு மற்றும் அவரது நெருங்கிய உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தியது. அப்போது கணக்கில் காட்டப்படாத ரூ.1 கோடி ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன்படி ரூ.600 கோடி அளவுக்கு ஊழல் நடைபெற்றிருப்பது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
இந்த வழக்கில் லாலு பிரசாத், அவரது மனைவி ராப்ரி தேவி, மகள்கள் மிசா பார்தி, ராகிணி உள்ளிட்டோரிடம் அமலாக்கத் துறை ஏற்கெனவே விசாரணை நடத்தி உள்ளது. லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் பிஹார் துணை முதல்வராக உள்ளார். கடந்த 11-ம் தேதி அவரிடம் அமலாக்கத் துறை 9 மணி நேரம் விசாரணை நடத்தியது.
இதைத் தொடர்ந்து லாலுவின் 3-வது மகள் சந்தா யாதவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணை பல மணி நேரம் நீடித்தது.