DMK Files குறித்த செய்திகள் தான் ஊடகங்களில் இன்றைய தினம் (ஏப்ரல் 14) தலைப்பு செய்தியாக மாறியுள்ளது. இதுதொடர்பான நிகழ்ச்சி சென்னை கமலாலயத்தில் மாநில பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதலில் ரஃபேல் வாட்ச் பில்லை செய்தியாளர்கள் முன்னிலையில் மாநிலத் தலைவர் அண்ணாமலை வெளியிட்டார். அதன்பிறகு 15 நிமிட வீடியோவில் திமுகவினரின் சொத்து மதிப்புகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டன.
அண்ணாமலை பேட்டி
பின்னர் பேசிய போது தமிழக அரசியல், அடுத்து வரும் 2024 மக்களவை தேர்தல், திராவிடக் கட்சிகள் எனப் பல விஷயங்களை பேசினார். குறிப்பாக சென்னை டூ கோவை வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் தொடக்க விழாவிற்காக சமீபத்தில் பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது அண்ணாமலை வரவில்லை. இதுதொடர்பாக பல்வேறு கருத்துகள் சமூக வலைதலங்களில் பரவின.
பிரதமர் மோடி அழைப்பு
இதைப் பற்றி அண்ணாமலை பேசுகையில், பிரதமர் மோடியே தொலைபேசியில் என்னிடம் சொன்னார். தம்பி நீ சென்னைக்கு வராதே என்று. உனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் பணி கர்நாடகா பணி. அதை மிகச் சிறப்பாக செய்து முடிக்க வேண்டும். நல்ல வேட்பாளர்களை கொடுக்க வேண்டியது அவசியம் என்று பிரதமர் கூறினார். அதனால் சென்னைக்கு வரவில்லை.
மோடி vs அண்ணாமலை
உடனே திமுகவை சேர்ந்த நிறுவனங்கள், நிர்வாகிகள் சில விஷயங்களை கிளப்பி விட்டனர். அண்ணாமலையை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து தூக்கி விட்டனர். அதனால் தான் இங்கு வரவில்லை. மோடிஜிக்கும், அண்ணாமலைக்கும் கோபம். மோடிஜி அண்ணாமலையின் கண்களை பார்க்க மாட்டார் என்றெல்லாம் கூறத் தொடங்கிவிட்டனர்.
துணிவான அரசியல்
ஆனால் என்னுடைய இடத்தில் சாதாராண தொண்டனுக்கு வாய்ப்பு கொடுத்தேன். மோடிஜியை தினமும் தான் நாங்கள் பார்த்து கொண்டிருக்கிறோம். மோடிஜியை பார்க்கவே முடியாது என நினைத்து கொண்டிருப்பவர்களுக்கு என்னுடைய இடத்தை கொடுக்கலாம் என நினைப்பவன் நான். எதற்கும் துணிந்து தான் அரசியலுக்கு வந்துள்ளேன்.
ஊழல் பட்டியல்
கடந்த இரண்டு மாதங்களாகவே நான் கொஞ்சம் உக்கிரமாகி விட்டேன். ஒரு விஷயத்தை எதிர்க்க வேண்டும் என்றால் அடிப்படையில் இருந்து அதை செய்ய வேண்டும் என்ற முடிவிற்கு நான் வந்துவிட்டேன். திமுக மட்டுமல்ல. தமிழ்நாடு அரசில் இதுவரை எந்த கட்சியெல்லாம் அமர்ந்திருக்கிறதோ? அத்தனை கட்சிகளின் ஊழலும் 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக வெளிவரும்.
டெல்லிக்கு போகலாம்
ஊழலை எதிர்க்க வேண்டுமெனில் பாதியாகலாம் எதிர்க்கக் கூடாது. அனைத்தையும் மொத்தமாக எதிர்ப்போம். எதிர்க்கக் கூடாது என்றால் டெல்லி சென்று அண்ணாமலையை மாற்றி விடுங்கள். ஆனால் நான் இருக்கும் வரை எதிர்ப்பேன். எதைப் பற்றியும் யோசிக்க மாட்டேன் என்று அண்ணாமலை தெரிவித்தார்.