கவுகாத்தி: அதிகார பசி கொண்டவர்கள் நாட்டிற்கு அதிக தீங்கிழைத்துவிட்டார்கள் என்றும், அவர்களின் ஒரே நோக்கம் நாட்டை ஆள்வது மட்டும்தான் என்றும் எதிர்கட்சிகளை பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்தியில் நடந்த வரலாற்று சிறப்பு மிக்க பிஹூர் கொண்டாட்டத்திற்கு முன்னதாக, பொதுக்கூட்ட நிகழ்வில் பிரதமர் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: “கடந்த 9 ஆண்டுகளாக நான் வட கிழக்கின் வளர்ச்சியைப் பற்றி பேசும்போதெல்லாம் சிலர் மிகவும் கலவரமடைகின்றனர். ஏனென்றால் இந்த மாநிலங்கள் அவர்களால் தான் வளர்ச்சி அடைந்தது என்று கூறமுடியாது. கடந்த பல தசாப்தங்களாக அவர்களும் நாட்டை ஆண்டதாக கூறிக்கொள்கிறார்கள். அதிகார வேட்கை உள்ளவர்கள் நாட்டை ஆள்வதை மட்டுமே நோக்கமாக கொண்டு மக்களுக்கு பெறும் தீங்குகளை செய்துவிட்டார்கள்.
நாங்கள் உங்களின் பணியாளர்கள் என்ற உணர்வுடன் பணியாற்றி வருகிறோம். அதனால் தான் வடகிழக்கு மாநிலங்கள் எங்களுக்கு வெகு தூரமாக தெரியவில்லை. நாம் எங்கே இருந்தாலும் அனைவரும் சொந்தம் என்ற உணர்வு நிலைத்திருக்கும். இன்று வடகிழக்கு மக்கள் முன்னேறி வந்து தங்களின் வளர்ச்சிக்கான பெயரைத் தாங்களே எடுத்துக்கொள்கின்றனர். வளர்ச்சி என்ற மந்திரத்தின் மூலம் அவர்கள் முன்னேறி வருகிறார்கள்.
வடகிழக்கு இன்று தனது முதல் எய்ம்ஸ் மருத்துவமனையையும், அஸ்ஸாம் மாநிலம் மூன்று மருத்துவக் கல்லூரிகளையும் பெற்றிருக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் நாங்கள் உள்கட்டமைப்பு திட்டங்களில் கவனம் செலுத்தியுள்ளோம். அதனால்தான் இங்கிருப்பவர்கள் நகரங்களை இணைக்கும் உள்கட்டமைப்பு திட்டங்கள் குறித்து பேசுகிறார்கள்.
குறிப்பிட்ட வாக்கு வங்கிகளை உருவக்குவாதற்காக செயல்படாமல் நாட்டு மக்களின் சிரமங்களை குறைப்பதில் நாங்கள் கவனம் செலுத்தினோம். சிகிச்சைக்காக எங்களின் சகோதரிகள் நீண்ட தூரம் செல்லக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம். பணம் இல்லை என்பதற்காக ஏழைகள் யாரும் தங்களின் சிகிச்சைகளை தள்ளிப்போடக்கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.
முந்தைய அரசாங்கத்தின் கொள்கைகளால் நம்மிடம் குறைவான மருத்துவர்களே இருந்தார்கள். இதனால் நாட்டில் அனைவருக்கும் சிறந்த சுகாகதாரச் சேவையை அளிப்பதில் பெரிய தடை இருந்தது. 2014க்கு முந்தைய 10 ஆண்டுகளில் நாட்டில் 150 மருத்துவக் கல்லூரிகளே இருந்தன. கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் நமது அரசாங்கத்தால் 300 மருத்துவக் கல்லூரிகள் புதிதாக கட்டப்பட்டுள்ளன. அதேபோல், மருத்துவப் படிப்புகளுக்கான இருக்கைகளும் 1 லட்சம் வரை இரட்டிப்பாக்கப்பட்டுள்ளன.
சிகிச்சைக்காக பணம் இல்லாமல் இருப்பது ஏழைகளுக்கு எவ்வளவு பெரிய துயரம் என்பதை நான் உணர்ந்திருக்கிறேன். அதனால்தான் நாங்கள் ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தை உண்டாக்கினோம். விலையுயர்ந்த மருந்துகளை வாங்குவது ஏழைகளுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் எவ்வளவு கவலைக்குரிய விஷயம் என்பதை நான் அறிவேன். அதனால் தான் நமது அரசாங்கம், குறைந்த விலையில் மருந்துக்களை பெறுவதற்காக 9,000 ஜன் அவுஷாதி கேந்திராக்களை உண்டாக்கி இருக்கிறது”. இவ்வாறு பிரதமர் பேசினார்.
அஸ்ஸாமியர்களின் புத்தாண்டை அறிவிக்கும் ரோகலி பிஹூ அல்லது போஹ் பிஹூ பல்வேறு சமூக மக்களால் கொண்டாடப்படுகிறது. அஸ்ஸாமியர்கள் ஆண்டுக்கு மூன்று முறை பிஹூ பண்டிகையைக் கொண்டாடுகின்றனர். விவசாயத்தின் தனித்துவமான சுழற்சியை குறிக்கும் இந்த பண்டிகை, ஜனவரியில், போகலி அல்லது மஹ் பிஹூ, ஏப்ரலில் போக் அல்லது ரோகலி பிஹூ, அக்டோபரில் கோங்கலி பிஹூ எனகொண்டாடப்படுகிறது.