சென்னை : பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது ரஃபேல் வாட்ச் தொடர்பாக இன்று ஆதாரங்களை வெளியிட்டுள்ள நிலையில், வருமான வரித்துறை விதியை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சமூக வலைதளங்களில் பலரும், Section 269ST-யை சுட்டிக்காட்டி அண்ணாமலை வெளியிட்ட ரசீதை விமர்சித்து வருகின்றனர்.
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தனது கையில் கட்டியிருக்கும் ரஃபேல் வாட்ச் தொடர்பான ரசீது, ஆவணங்களை இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், “காவல்துறை பணியில் இருந்தபோது பெற்ற லஞ்ச பணத்தில் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக திமுகவினர் பொய்யாகப் பரப்பினர். ஆனால் ரஃபேல் வாட்ச் வரிசையில் 147வது வாட்ச்சை நான் கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் வாங்கினேன். இதனை கோவையைச் சேர்ந்த எனது நண்பர் சேரலாதன் ராமகிருஷ்ணன் என்பவரிடமிருந்து 3 லட்சம் ரூபாய்க்கு வாங்கினேன்” எனக் கூறினார்.
சேரலாதன் ராமகிருஷ்ணன் ரஃபேல் வாட்ச் வாங்கியதாக ஒரு ரசீது மற்றும் அவரிடமிருந்து அண்ணாமலை ரஃபேல் வாட்சை வாங்கிக்கொண்டு ரொக்கமாக 3 லட்ச ரூபாய் கொடுத்ததாக கையெழுத்து போடப்பட்ட ரசீது ஆகியவற்றையும் வெளியிட்டார் அண்ணாமலை. இரண்டிலும் இருக்கும் வாட்ச் சீரியல் நம்பரில் வேறுபாடு இருப்பது சர்ச்சைக்குள்ளாகி இருக்கும் நிலையில், இன்னொரு விஷயமும் தற்போது வெகுவாக விவாதிக்கப்பட்டு வருகிறது.
பிரிவு 269ST : சட்டவிரோதமான மற்றும் கணக்கில் காட்டப்படாத பணப் பரிவர்த்தனைகளைத் தடுக்க, மத்திய அரசு பணப் பரிவர்த்தனை வரம்பு விதிகள் பிரிவு 269ST யை திருத்தியது. அதன்படி, ரூ. 2 லட்சத்துக்கு அதிகமாக ஒரே நாளில் ஒரே நபரிடமிருந்து ரொக்கப் பரிமாற்றம் செய்ய தடை கொண்டு வரப்பட்டது. 2018ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ரொக்கமாக ரூ. 2 லட்சத்துக்கு அதிகமான தொகையை எந்தவொரு தனிநபரும் பெறக்கூடாது.
அவ்வாறு ரூ. 2 லட்சத்திற்கும் மேல் ரொக்கப் பணப்பரிமாற்றம் செய்வது கண்டுபிடிக்கப்பட்டால், பணத்தைப் பெறுபவருக்கு அதே அளவு அபராதம் விதிக்கப்படும். ஒரு நபர் 2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பணத்தை, நிறுவனம், கடை என்றில்லை, சொந்தக் குடும்பத்தினரிடம் இருந்து கூட பெற முடியாது. 2 லட்சத்திற்கும் மேல் பணம் பெற வேண்டும் என்றால் வங்கி பரிமாற்றம், காசோலை உள்ளிட்டவற்றின் மூலமே பரிவர்த்தனை செய்ய வேண்டும்.
ரொக்கம் லிமிட் : என்னதான் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் இடையேயான பரிமாற்றத்திற்கு ரசீது இருந்தாலும் ரொக்கமாக 2 லட்சத்திற்கும் மேல் பெற முடியாது. பணத்தைப் பெறும் நபர் பான் கணக்கு எண் வைத்திருந்தாலும், இதில் விலக்கு பெற முடியாது என்பதுதான் விதிமுறை பிரிவு 269ST. ரூ.2 லட்சம் அல்லது அதற்கு அதிகமாக ரொக்கமாக பணப்பரிமாற்றம் செய்தால், அது குறித்து யார் வேண்டுமானாலும் வருமான வரித்துறையின் கறுப்புப் பண ஒழிப்பு பிரிவுக்கு புகார் அளிக்கலாம்.
அபராதம் யாருக்கு? : இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் இருந்து தனது வாட்ச்சுக்கான பணம் ரூ. 3 லட்சத்தை 2021 மே மாதம் சேரலாதன் ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டதாக கையெழுத்து போட்ட ரசீதை அண்ணாமலை வெளியிட்டுள்ளார். வருமான வரிச் சட்ட விதிமுறை பிரிவு 269ST-ன் படி இது விதிமீறல். இதில் வருமான வரித்துறை, ரொக்கமாக ரூ. 3 லட்சம் பெற்ற சேரலாதன் ராமகிருஷ்ணனுக்கு அதே அளவான ரூ. 3 லட்சம் அபராதம் விதிக்கப்படலாம்.
இந்த சட்டப் பிரிவைச் சுட்டிக்காட்டி, நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். இவ்வளவு நாளாக ரஃபேல் வாட்ச் பில் எங்கே எனக் கேட்கப்பட்டு வந்த நிலையில், இன்று ரசீதை வெளியிட்டுள்ள நிலையிலும் அண்ணாமலை மீண்டும் சர்ச்சையில் மாட்டிக்கொண்டுள்ளார். இதில் அடுத்தகட்ட நகர்வு என்னவாக இருக்கப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.