தேனி மாவட்டம், தேவாரம் அருகே உள்ள மூனாண்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த தம்பதி ஜெயராஜ்-ரத்தினம். இவர்களின் இளைய மகன் யோகேஷ்குமார் 2019-ம் ஆண்டு இந்திய ராணுவத்தில் சேர்ந்து தற்போது பஞ்சாபில் பணிபுரிந்து வந்தார். பஞ்சாப் ராணுவ முகாமில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த துப்பாக்கிச்சூட்டில் யோகேஷ்குமார் உள்பட 4 பேர் பலியானார் என இந்திய ராணுவம் உறுதி செய்திருக்கிறது.
முகாமில் உயிரிழந்த யோகேஷ்குமாரின் உடல் இறுதி சடங்கிற்காக இன்று காலை பஞ்சாப்பில் இருந்து மதுரை விமான நிலையத்தில் காலை 9 மணிக்கு வந்தடைந்தது. அதனைத்தொடர்ந்து தேவாரத்தில் இருந்து மறைந்த யோகேஷ் குமாரின் நண்பர்கள் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் கருப்பு பேட்ஜ் அணிந்து ஊர்வலமாக அவரின் சொந்த ஊரான மூணாண்டிபட்டி இல்லத்துக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடலுக்கு பொதுமக்கள், உறவினர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர். திமுக தெற்கு மாவட்ட செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான கம்பம் ராமகிருஷ்ணன் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
இதற்கிடையே மறைந்த யோகஷ்குமார் உடலுக்கு ராணுவ மரியாதை வழங்கப்படவில்லை என்க கூறி யோகேஷ் குமாரின் நண்பர்கள், உறவினர்கள் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டுனர் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. ராணுவ மரியாதை வழங்கவில்லை என்றால் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என 20 நிமிடங்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனைத் தொடர்ந்து 2 ராணுவ அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதையடுத்து யோகேஷ்குமாரின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டனர். பின்னர் அவரின் உடலில் தேசிய கொடி போர்த்தியவாறு ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். அதோடு, ரங்கநாதபுரம் மயானத்தில் அடக்கம் செய்வதற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்று அவர்களது குடும்ப வழக்கப்படி தகனம் செய்யப்பட்டது.