சொப்பன சுந்தரி விமர்சனம்: காருக்கு அக்கப்போர்; ஐஸ்வர்யா ராஜேஷின் நாயகி பிம்ப சினிமா ஈர்க்கிறதா?

பரிசுப்பொருளாக வந்த கார் ஒன்று, மூன்று பெண்களின் வாழ்வில் நிகழ்த்தும் மாற்றங்களே இந்த `சொப்பன சுந்தரி’.

நகைக்கடையில் பணியாற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், தன் அம்மா தீபா ஷங்கர், வாய் பேச முடியாத அக்கா லட்சுமி பிரியா சந்திரமௌலி, உடம்புக்கு முடியாத அப்பா ஆகியோருடன் போராட்டமான ஒரு வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார். நகைக்கடையின் பம்பர் பரிசாக ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்று இவர்களைத் தேடிவர, அதைவைத்து அக்காவின் திருமணத்தை முடித்துவிடத் திட்டமிடுகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். ஆனால், கார் வந்தவுடன் பிரச்னைகளும் கூடயே வருகின்றன. வீட்டைவிட்டு ஓடிப்போன அண்ணன், தன் மச்சானுடன் வந்து காருக்கு உரிமைக்கொண்டாடி சண்டைபோட, பிரச்னை காவல்நிலையம் வரை செல்கிறது. லட்சுமி பிரியா தன் வருங்கால கணவனுடன் காரில் ஒரு ரகசியத்தையும் மறைத்துவைத்திருக்க, அதைக் காக்கவும், காரை மீட்கவும் போராடுகிறது ஐஸ்வர்யா ராஜேஷ் தலைமையிலான மூன்று பெண்கள் கொண்ட படை. அதில் அவர்கள் வென்றார்களா, காரிலிருந்த ரகசியம் என்னவானது?

சொப்பன சுந்தரி விமர்சனம்

வீட்டின் கடைசிப் பெண்ணாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் முதல் பாதியில் வழக்கமான ஒரு கதாபாத்திரமாக மட்டுமே வந்துபோனாலும், இரண்டாம் பாதியில் வரும் சதி திட்டங்கள், புத்திசாலித்தனமான ப்ளானிங் போன்றவற்றுக்குச் சிறப்பானதொரு பங்களிப்பை அளித்திருக்கிறார். ஸ்டன்ட் காட்சிகளிலும் தன் உழைப்பைக் கொடுத்து மாஸ் ஹீரோயினாக பாஸாகிறார். லட்சுமி பிரியா சந்திரமௌலி நன்றாகவே நடித்திருந்தாலும் அவரின் பாத்திரத்தை இன்னமும் பயன்படுத்தியிருக்கலாம் என்பது மட்டுமே குறை.

அம்மாவாக வரும் தீபா ஷங்கர், தன் `டாக்டர்’ படப் பாத்திரத்தை நினைவூட்டினாலும் காமெடி லைனர்களால் ஆங்காங்கே சிரிக்க வைக்கிறார். அவரின் மிகை நடிப்பும் இந்த வகை டார்க் காமெடிக்கு உதவியிருக்கிறது.

மோசமான அண்ணனாக கருணாகரன், வில்லன் இன்ஸ்பெக்டராக சுனில் ரெட்டி, குழப்பத்தை உண்டு பண்ணும் பாத்திரத்தில் மைம் கோபி என நெகட்டிவ் வைப் கேரக்டர்களுக்கு இவர்கள் அனைவருமே கச்சிதமாக உயிர்கொடுத்திருக்கின்றனர். ரெடின் கிங்ஸ்லி ரெடின்னாகவே தோன்றும் மற்றுமொரு படம், அதில் எப்போதும்போல தன் பாணி நகைச்சுவையை வெளிப்படுத்தியிருக்கிறார். டான்ஸ் மாஸ்டர் சதீஷ், ஷா ரா போன்றோர் ‘அநியாயத்துக்கு நல்லவங்க’ கேரக்டரில் தேவையான நடிப்பை வழங்கியிருக்கின்றனர்.

சொப்பன சுந்தரி விமர்சனம்

அம்மா மற்றும் இரண்டு மகள்கள் என மூன்று பெண்களை முன்னிலைப்படுத்தி ஒரு டார்க் காமெடி கதையைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் எஸ்.ஜி.சார்லஸ். பல இடங்களில் சிரிப்பு வந்தாலும் அதற்கு சமமாகச் சோதிக்கவும் செய்கின்றன வசனங்கள். ஆரம்பக் காட்சிகள் சற்றே சோதித்தாலும், கார் பிரச்னை, இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தின் வருகை போன்றவற்றுக்குப் பிறகு போரடிக்காமலே நகர்கிறது படம். அதைத் தொடர்ந்து ஐஸ்வர்யா ராஜேஷின் கதாபாத்திரம் முதன்மைப்படுத்தப்பட, பில் திருட்டு, ரகசிய ப்ளான், காருக்குள் பிணம் இருக்கும் பிரச்னை என்பதாகத் திரைக்கதையும் வேகமெடுக்கிறது.

ஜி.பாலமுருகன் மற்றும் விக்னேஷ் ராஜகோபாலனின் ஒளிப்பதிவு, சரத்குமார் மற்றும் புவன் சீனிவாசனின் படத்தொகுப்பு ஸ்லோமோஷன் காட்சிகள், சண்டைக் காட்சிகள் போன்றவற்றுக்குக் கூடுதல் பலம் சேர்த்திருக்கின்றன. அஜ்மல் தாஹ்சீனின் இசையில் ஆரம்பத்தில் வரும் ‘பணக்காரி’ பாடல் வைப் மோடுக்குக் கொண்டு செல்கிறது. விஷால் சந்திரசேகரின் பின்னணி இசை ஈர்த்தாலும், ஒரு கட்டத்தில் ஓவர்டோஸ் ஆகிவிடுகிறது.

சொப்பன சுந்தரி விமர்சனம்

என்னதான் டார்க் காமெடி படம் என்றாலும் பாலியல் வன்கொடுமை, கிட்னி விற்பது போன்றவற்றை எல்லாம் நகைச்சுவையாக அணுகியது அபத்தத்தின் உச்சம். பாலியல் வன்கொடுமை போன்ற குற்றங்கள் பல பெண்களுக்கு என்றுமே ஆராத வடுவாக இருக்க, ‘கெட்ட கனவா நினைச்சு மறந்தடறேன்’ என கேசுவலாக அதை டீல் செய்தது உறுத்தல். என்னதான் அது பின்வரும் மாஸ் காட்சிக்கான உள் அர்த்தத்தோடுதான் என்றாலும் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அந்த ‘கார் டிக்கி’ ட்விஸ்டும் முன்கூட்டியே யூகிக்க முடிவது பலவீனம்.

இதைத் தாண்டி, நகைக் கடையில் வேலை செய்யும் ஐஸ்வர்யா ராஜேஷுக்கு அந்த நகைக் கடையே நடத்தும் போட்டியில் பரிசு விழுவதும் முரணே! பரிசு கொடுக்கும் முதலாளியும் ‘எங்க கடையிலதான் வேலை செய்றாங்க’ என்பதாக கூலாக நடந்துகொள்வது நெருடல்.

சீரியஸான பிரச்னைகளைச் சரியாக அணுகி, காமெடி மட்டுமே பிரதானம் என்ற ரூட்டில் பயணித்திருந்தால் இந்த `சொப்பன சுந்தரி’யும் அவரின் காரும் இன்னமுமே ஈர்த்திருப்பார்கள்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.