திருவின் குரல் விமர்சனம்: அருள்நிதியின் மற்றுமொரு த்ரில்லரா அல்லது சிக்கல்கள் நிறைந்த ஆக்‌ஷன் படமா?

ஒரு சாதாரண இளைஞன், தன் குடும்பத்துக்காக நான்கு கொலைகாரர்களை எதிர்த்து நடத்தும் யுத்தமே இந்த `திருவின் குரல்’.

குரலற்ற மாற்றுத்திறனாளியான திரு, தன் குடும்பத்தினருடன் சந்தோஷமாக வாழ்கிறான். அக்கா, அக்கா மகள், அப்பா, பாட்டி, அத்தை, அத்தை மகள், அவருடன் விரைவில் திருமணம் என அவரின் மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கையைப் பாதிக்கிறது அப்பா பாரதிராஜா சந்திக்கும் விபத்து. அரசு மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட, அங்கே பணியாற்றும் வார்டு பாய், லிஃப்ட் ஆபரேட்டர், பிணவறை ஊழியர், செக்யூரிட்டி என நால்வர் கூட்டணியுடன் அருள்நிதிக்கு மோதல் ஏற்படுகிறது. கொலைகாரர்களான அந்த நால்வர் அருள்நிதியைப் பழிதீர்க்க எந்த எல்லை வரை போகிறார்கள், அதை அருள்நிதி எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் இந்தப் படத்தின் கதை.

திருவின் குரல் விமர்சனம்

வாய் பேச முடியாத, அதனால் செவித்திறனும் சற்றே பாதிப்படைந்த சவாலான வேடத்தில் அருள்நிதி. இது மட்டுமே வித்தியாசமே தவிர, அவர் வழக்கமாகச் செய்யும் மற்றுமொரு பாத்திரம்தான் இதுவும். சென்டிமென்ட் எமோஷன் தவிர, மற்ற எல்லா ஏரியாவிலும் ஸ்கொர் செய்கிறார். அப்பாவாக பாரதிராஜா, பாசமான முகத்தைக் காட்டும்போதும், அரசு மருத்துவமனையில் உடல் வலியால் தவிக்கும்போதும் ஒரு நடிகராக நம் மனதில் வந்து அமர்கிறார். ஆத்மிகாவுக்கு சம்பிரதாய நாயகி வேடம் மட்டுமே. வில்லன்களாக வரும் அஸ்ரஃப், ஜீவா, மகேந்திரன், ஹரீஷ் என நால்வருமே பக்காவான தேர்வு. குறிப்பாகப் பிரதான வில்லனாக வரும் அஸ்ரஃப்பின் குரலும் செயல்களும் பயமுறுத்தும் வேலையைக் கச்சிதமாகச் செய்கின்றன.

அறிமுக இயக்குநர் ஹரீஷ் பிரபு, ஒரு சைக்கலாஜிக்கல் ஆக்‌ஷன் த்ரில்லர் படத்தைக் கொடுக்க முயன்றிருக்கிறார். நான்கு கொடூர கொலைகாரர்களின் வழியில் செய்வதைத் திருந்தச் செய்யும் சாதாரண நாயகனும் அவனின் குடும்பமும் வந்தால் என்னவாகும் என்ற `நான் மகான் அல்ல’ பாணி ஒன்லைன்தான் கதைக்களம். என்றாலும் அதில் அக்கா மகள் சந்திக்கும் பிரச்னை, நாயகனின் அக உணர்வுகள், குடும்பத்தினருக்கு எதுவும் ஆகக்கூடாது என்ற பதைபதைப்பு போன்றவற்றைக் கடத்துவதில் ஓரளவு வெற்றி பெற்றிருக்கிறார் இயக்குநர். அதற்கு ஏற்றவாறு சென்டிமென்ட், காதல், அதன் பின் வரும் ட்விஸ்ட், அதனால் உண்டாகும் பிரச்னை என்று சுவாரஸ்யமாகவே நகர்கிறது முதல் பாதி.

திருவின் குரல் விமர்சனம்

அரசு மருத்துவமனை முன்பு நடக்கும் சண்டைக்காட்சி, கடைசியில் வரும் மழை சண்டைக்காட்சி, க்ளைமாக்ஸில் சோளக்காடு சண்டைக்காட்சி போன்றவற்றில் சிறப்பாக உழைத்திருக்கிறது ஸ்டன்ட் குழு. கணேஷ் சிவாவின் படத்தொகுப்பு சண்டைக்காட்சிகளில் மட்டும் கவனிக்க வைக்கிறது. பெரும்பாலும் அரசு மருத்துவமனையையே வட்டமடிக்கும் கதையை போரடிக்காமல் நகர்த்த உதவியிருக்கிறது சின்ட்டோ பொடுதாஸின் கேமரா. குறிப்பாகப் பதைபதைப்பைக் கூட்டும் லிஃப்ட் காட்சிகளில் கூடுதல் மிரட்சியை ஏற்படுத்துகிறது ஒளிப்பதிவு. சாம் சி.எஸ் இசையில் பாடல்கள் ஈர்க்கவில்லை என்றாலும், திரைக்கதையில் இருக்கும் குறைகளை மறக்கும் வகையில் பின்னணி இசையமைத்து டெம்போவைக் கூட்டியிருக்கிறார்.

குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரின் பாத்திரங்களும் நிறைவாக எழுதப்பட்டிருப்பது சிறப்பு. ஆனால் நான்கு வில்லன்களின் பின்புலம் என்ன, அவர்கள் பாலியல் குற்றவாளிகளா, சீரியல் கில்லர்களா, பணத்துக்காக மட்டுமே கொலை செய்பவர்களா, அவர்களின் முதன்மை நோக்கம்தான் என்ன என்பது பற்றியெல்லாம் விளக்கம் ஏதுமில்லை.

சாதாரண வார்டு பாய், மருத்துவக் கோப்புகளை ஜஸ்ட் லைக் தட் மாற்றுவது, அரசு மருத்துவருக்கே செக் வைத்து மிரட்டி ஊசி போட வைப்பது போன்றவை லாஜிக்கற்ற காட்சிகள். முதல் பாதியில் வழிப்பறிக்கொள்ளை, கொலைகள் என நிறைய நடந்தாலும், ஆற அமர இரண்டாம் பாதியில்தான் அட்டெண்டன்ஸ் போடுகிறது காவல்துறை. ஆனால், அவர்கள் வந்த பின்னும் கதையில் எந்தத் தாக்கமும் இல்லை என்பது மைனஸ். நாயகனை மாற்றுத்திறனாளியாகக் காட்டியதற்கும் திரைக்கதையில் வலுவான காரணங்கள் இல்லை.

திருவின் குரல் விமர்சனம்

குற்றவாளிகள் அரசு மருத்துவமனையில் கடைநிலை ஊழியர்களாக இருப்பதுபோலக் காட்டுவது படைப்புச் சுதந்திரம் என்றாலும் அவர்களின் அதீத வில்லத்தனம், கொடூர கொலைகள், பெண்களைப் பார்க்கும் பார்வை போன்றவை படத்துக்குச் சிக்கலே! சாமானியன், அரசு மருத்துவமனை என்றாலே அச்சம்கொள்ள வைக்கும் வகையில் அக்காட்சிகள் விரிவது ஆபத்தான ஒன்றே! பிரதான வில்லனைப் புத்திசாலியாகக் காட்ட, “ரெண்டு நாள்ல போலீஸ் வரும்”, “அவன் சீக்கிரமே நம்ம இடத்துக்கு வருவான்” என ஸ்க்ரிப்ட் பேப்பரை முதலிலேயே படித்தவராக அவர் ஆருடம் சொல்லிக்கொண்டே இருக்கிறார். அவை அப்படியே நடக்கின்றன என்றபோதும், எல்லாம் தெரிந்திருந்தும் அவர்கள் அதே தவறுகளைத் திரும்பத் திரும்பச் செய்வது லாஜிக் சிக்கலே!

இரண்டாம் பாதியில் லாஜிக்கைக் கவனித்து, அரசு மருத்துவமனை குறித்த ஆபத்தான பார்வையையும் சரி செய்திருந்தால் இந்த `திருவின் குரல்’ ஓங்கி ஒலித்திருக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.