புல்வாமா தாக்குதலில் உளவுத்துறை தோல்வி, மற்றும் வீரர்களுக்கு விமானம் மறுக்கப்பட்டது குறித்து எதுவும் பேசக்கூடாது என பிரதமர் வற்புறுத்தியதாக, அப்போதைய கவர்னர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார்.
புல்வாமா தாக்குதல்
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் நடந்த புல்வாமா தாக்குதலை யாராலும் மறக்க முடியாது. 40 ராணுவ வீரர்கள் குண்டு வெடிப்பில் துள்ளத் துடிக்க கொல்லப்பட்டனர். இந்தநிலையில் ஜம்மு காஷ்மீரின் அப்போதைய கவர்னரின் இன்றைய பேட்டி பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. ஜம்மு காஷ்மீர் பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேச அந்தஸ்துக்குக் குறைக்கப்படுவதற்கு முன்பு அதன் கடைசி ஆளுநராக இருந்தவர் சத்யபால் மாலிக்.
பிப்ரவரி 2019 புல்வாமா பயங்கரவாதத் தாக்குதலின் போது ஆளுநராக இருந்த மாலிக், புல்வாமாவில் ராணுவ வீரர்கள் மீது பயங்கர பயங்கரவாத தாக்குதலுக்கு காரணமான உள்துறை அமைச்சகத்தின் அலட்சியத்தை அவர் கேள்வி எழுப்பியுள்ளார். ஒரு பரந்த நேர்காணலில், புல்வாமாவில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை கான்வாய் மீதான தாக்குதல் என்பது, உள்துறை அமைச்சகத்தின் திறமையின்மையின் விளைவு என்று மாலிக் கூறியுள்ளார்.
அப்போது ராஜ்நாத் சிங் உள்துறை அமைச்சராக இருந்தார். சிஆர்பிஎஃப் தனது ஜவான்களை ஏற்றிச் செல்ல விமானம் கேட்டது எப்படி என்பது பற்றிய விரிவான விவரங்களை மாலிக் அளித்தார், ஆனால் மத்திய உள்துறை அமைச்சகம் அதை மறுத்தது. சாலை மார்க்கமாக செல்ல ஆணையிட்டது. வீரர்கள் செல்லும் பாதையின் பாதுகாப்பு எவ்வாறு திறம்பட செய்யப்படவில்லை என்பதையும் அவர் விளக்கினார்.
கம்முனு இருக்கணும்
மிக முக்கியமாக, புல்வாமா தாக்குதலுக்குப் பிறகு பிரதமர் மோடி தன்னை அழைத்தபோது, இந்த குறைபாடுகள் குறித்து பிரதமரிடம் கேள்வி எழுப்பினேன். ஆனால் இதுபற்றி யாரிடமும் கூறாமல் அமைதியாக இருக்குமாறு பிரதமர் தன்னிடம் கூறியதாக அவர் கூறினார். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலும் தன்னிடம் அமைதியாக இருக்குமாறும், அதைப் பற்றி பேச வேண்டாம் என்றும் கூறியதாக மாலிக் கூறினார். பாக்கிஸ்தான் மீது பழியை சுமத்தி அரசாங்கத்திற்கும் பாஜகவிற்கும் தேர்தல் ஆதாயத்தைப் பெறுவதே நோக்கம் என்பதை உடனடியாக உணர்ந்தேன் என அவர் தெரிவித்துள்ளார்.
புல்வாமா சம்பவத்தில் 300 கிலோகிராம் RDX வெடிமருந்துகளை ஏற்றிச் சென்ற கார் பாகிஸ்தானில் இருந்து வந்ததாகவும், ஜம்மு காஷ்மீர் சாலைகள் மற்றும் கிராமங்களில் 10-15 நாட்களாக யாருக்கும் தெரியாமல் சுற்றித் திரிந்ததால், புல்வாமா சம்பவத்தில் பெரும் உளவுத்துறை தோல்வி ஏற்பட்டது என்றும் மாலிக் கூறினார்.
பாஜக வென்ற கதை
புல்வாமா தாக்குதல் நடந்த பின்னர், பாகிஸ்தானுக்குள் நுழைந்த இந்திய விமானப்படை அங்கிருந்த தீவிரவாத முகாம்களை அழித்ததாக கூறியது. அதைத் தொடர்ந்து பிரதமர் மோடியின் பிம்பம் நாடு முழுவதும் பெரிதாக பரப்பபட்டது. அதைத் தொடர்ந்தே அந்த ஆண்டில் நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையாக வெற்றி பெற்றது என்பது குறிப்பிடதக்கது.