கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலை முருகன் கோயிலில் உள்ள 60 தமிழ்வருட தேவதைகள் படிக்குத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருப்படி பூஜைகள் செய்து தீபம் ஏற்றி வழிபட்டனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சுவாமிமலையில் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காவது படைவீடான சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் அமைந்திருக்கிறது. இக்கோயிலில் உள்ள 60 படிகளில் தமிழ் வருட தேவதைகள், தங்களின் பெயர்களுடன் 60 படிகளாக அமர்ந்து, சுவாமிநாத சுவாமிக்கு சேவை செய்வதாக சொல்லப்படுவது ஐதிகம். இந்தச்சிறப்பு வேறு எந்தக் கோயிலிலும் இல்லாத ஒன்றாகும்.
இந்தநிலையில் வருடம் தோறும், தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தமிழ் வருட தேவதைகள் பெயருடன் அமைந்திருக்கும் 60 படிகளுக்கும் திருப்படி பூஜை நடைபெறுவது வழக்கம். அதன்படி, தமிழ்ப் புத்தாண்டான இன்று திருப்படிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
படிகளில், மஞ்சள் தடவி அதில் பொட்டு பூ, பழம் வைத்து தேங்காய் உடைத்து தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்பட்டது. இதில், ஸ்ரீசோபகிருது ஆண்டுக்குரிய படிக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டன. இந்த ஆண்டில் மழை வளம் பெருக வேண்டும். இயற்கை செழித்து, வறட்சி நீங்கி விவசாயம் பெருகி நல்ல விளைச்சல் கிடைக்க வேண்டும் எனப் பிரார்த்தனை செய்யப்பட்டது.
இதற்காக இன்று அதிகாலையில் கோயிலில் நடை திறக்கப்பட்டது. மூலவர் சுவாமிநாத சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தி தங்கக் கவசம், வைரவேல் அலங்காரம் செய்யப்பட்டது. தங்ககவசம், வைரவேல் அலங்காரத்தில் ஜொலித்த சுவாமிநாத சுவாமியை, ‘முருகா… முருகா’ கோஷமிட்டபடி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.