சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், அனைத்து நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த சில காலமாக நாடு முழுக்கவே வைரஸ் பாதிப்பு குறைந்து வந்த நிலையில், இப்போது மீண்டும் நாட்டில் கொரோனா அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கடந்த ஒரே மாதத்தில் வைரஸ் பாதிப்பு நாட்டில் சுமார் 12 மடங்கு அதிகரித்துவிட்டது. புதிதாகப் பரவும் ஓமின்காரன் திரிபே வைரஸ் பாதிப்பு அதிகரிக்கக் காரணம் என்று சொல்லப்பட்டது.
கொரோனா: கொரோனா அதிகரித்து வரும் நிலையில், இது தொடர்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத் துறை அமைச்சர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதில் கொரோனா அதிகரித்து வரும் நிலையில், அதைத் தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது. மேலும், கொரோனா டெஸ்டிங்கை அதிகரிக்கவும் உத்தரவிடப்பட்டது
அதைத் தொடர்ந்து கடந்த வாரம் நாடு முழுக்க கொரோனா தடுப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. தமிழ்நாட்டில் படுக்கைகள் மற்றும் ஆக்சிஜன் போதியளவில் உள்ளதாகவும் கொரோனாவை சமாளிக்கத் தயாராக உள்ளதாகவும் சுகாதாரத் துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
தமிழ்நாடு கொரோனா: இதனிடையே மாநிலத்தில் பதிவான தினசரி கொரோனா பாதிப்பு குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டில் இப்போது தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ நெருங்கி வருகிறது. வெள்ளிக்கிழமை மட்டும் 493 பேருக்குத் தமிழகத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் ஆக்டிவே கேஸ்களின் எண்ணிக்கையும் 2876ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா பாதிப்பு இப்படித் தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், வரும் ஏப்ரல் 17 முதல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து கீழமை நீதிமன்றங்களிலும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாஸ்க் கட்டாயம்: கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்படுவதாகச் சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. இது மட்டுமின்றி, வழக்குகள் பட்டியில்படாதவர்கள் நீதிமன்ற வளாகத்திற்கு வரவேண்டாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் இருப்பவர்கள் தனி மனித இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என்றும் உயர்நீதிமன்ற உதவி பதிவாளர் உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே மருத்துவமனைகளில் மாஸ்க் அணிவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தச் சூழலில் கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும் நிலையில், நீதிமன்றங்களிலும் இப்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இப்போது பரவும் ஓமிக்ரான் திரிபு பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை என்ற போதிலும் இணை நோய் உள்ளவர்கள் எச்சரிக்கையாக இருக்கும்படி வல்லுநர்கள் வலியுறுத்தியுள்ளனர். பொது இடங்களில் செல்லும் போது மாஸ்க் அணிய வேண்டும் என்றும் கைகளை அடிக்கடி கழுவும்படியும் வலியுறுத்துகின்றனர்.