காங்., இன்றி பா.ஜ.,வை வீழ்த்த முடியாது; சரத்பவார், நிதிஷிடம் எகிறிய ராகுல்| Cant defeat Congress without BJP; Rahul jumps at Sharad Pawar, Nitish

சென்னை : மாநில கட்சிகளின் தலைவர்களை, மற்ற மாநிலங்களில் ஏற்க மாட்டார்கள் என்றும், காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைக்காவிட்டால், பா.ஜ.,வை வீழ்த்த முடியாது என்றும், சரத்பவார், நிதிஷ் குமாரிடம், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வலியுறுத்திய தகவல் வெளியாகியுள்ளது.

வரும் 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வை தோற்கடிக்க, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து, வலுவான கூட்டணி அமைக்கும் பணிகளை, காங்கிரஸ் தீவிரப்படுத்தியுள்ளது. வரும் மே 13-ம் தேதி, கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே, கூட்டணி பணிகளை காங்கிரஸ் துவங்கும் என, அனைவரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், கர்நாடக சட்டசபை தேர்தல் உச்சத்தில் இருக்கும்போதே, லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுக்கு எதிராக, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளை, காங்கிரஸ் துவக்கியுள்ளது.

ஆலோசனை

டில்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இல்லத்தில், 12-ம் தேதி நடந்த சந்திப்பில், பீஹார் முதல்வர் நிதிஷ்குமார், துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ராகுலை சந்தித்து, நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர்.

மேற்கு வங்கத்தில் மம்தா, ஒடிசாவில் நவீன் பட்நாயக், ஆந்திராவில் ஜெகன்மோகன் ரெட்டி, டில்லி, பஞ்சாப், ஹரியானா, கோவா, குஜராத்தில் ஆம்ஆத்மியுடன் கூட்டணி அமைத்தால் தான் பா.ஜ.,வை தோற்கடிக்க முடியும் என, நிதிஷ் கூறியுள்ளார்.

அதை உறுதிப்படுத்தும் வகையில், ராகுலை சந்தித்த அன்று மாலையே, ஆம்ஆத்மி கட்சி தலைவர் கெஜ்ரிவாலை, நிதிஷ்குமார் சந்தித்தார்.

அதன் தொடர்ச்சியாக, நேற்று முன்தினம் டில்லியில் உள்ள கார்கே இல்லத்திற்கு வந்த, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், அங்கு ராகுலுடன் ஆலோசனை நடத்தினார். எதிர்க்கட்சிகளை ஓரணியில் திரட்ட, அப்போது சரத்பவார் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியதாக கூறப்படுகிறது.

‘பெரிய கட்சி என்ற மனப்பான்மையில் இருந்து விடுபட்டு, பா.ஜ., அல்லாத அனைத்து கட்சி தலைவர்களையும், ராகுல் நேரில் சந்திக்க வேண்டும். பா.ஜ., மட்டுமே எதிரி என்பதிலிருந்து மாறக் கூடாது.

நம்பிக்கை

‘மம்தா, கெஜ்ரிவால், ஜெகன்மோகன் ரெட்டி, நவீன் பட்நாயக், சந்திரசேகர ராவ் என அனைவரையும் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்’ என, ராகுலிடம் சரத்பவார் கூறியுள்ளார்.

அதற்கு பதிலளித்த ராகுல், ‘பா.ஜ.,வை தோற்கடிக்க யாருடனும் கூட்டணிக்கு காங்கிரஸ் தயாராக உள்ளது.

அனைத்து மாநிலங்களிலும் உள்ள பெரிய கட்சியான காங்கிரஸ் தலைமையில் கூட்டணி அமைத்தால் மட்டுமே, பா.ஜ.,வை வீழ்த்த முடியும். மாநில கட்சி தலைவர்களில் ஒருவரை, பிரதமர் வேட்பாளராக அறிவித்தாலும், மற்ற மாநிலங்களில் ஏற்க மாட்டார்கள். அது பா.ஜ., வெற்றிக்கே வழிவகுக்கும்’ என காட்டமாக கூறியுள்ளார்.

மம்தா, கெஜ்ரிவால் உள்ளிட்டோரிடம் தான் பேச இருப்பதாக, சரத்பவார் தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணி, எதிர்பார்த்ததை விட வேகமெடுத்துள்ளதாகவும், கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியான சில வாரங்களிலேயே, பா.ஜ.,வுக்கு எதிரான கூட்டணி ஒரு வடிவத்திற்கும் வந்து விடும் என்றும், காங்கிரஸ் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.