மதுபானக் கொள்கை முறைகேடு.. சிபிஐ விசாரணைக்கு ஆஜராகும் கேஜ்ரிவால்.. என்ன நடக்க போகிறதோ..?

டெல்லி:
மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சிபிஐ அலுவலகத்தில் நாளை ஆஜராகவுள்ளார். விசாரணையின் போதே அர்விந்த் கேஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாவதால் ஒட்டுமொத்த டெல்லியே பரபரப்பாக காணப்படுகிறது.

டெல்லியில் கடந்த 2021-ம் ஆண்டு புதிய மதுபானக் கொள்கையை முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு அறிமுகப்படுத்தியது. இந்தக் கொள்கையின் படி, டெல்லி பல்வேறு மதுபான மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, 800-க்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை நிலையங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய தனியாருக்கு உரிமம் வழங்கப்பட்டது.

பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த புதிய மதுபானக் கொள்கைக்கு டெல்லி மக்கள் மத்தியிலேயே கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. இதன் தொடர்ச்சியாக, புதிய மதுபானக் கொள்கையை டெல்லி அரசு கைவிட்டது.

சீறிப்பாய்ந்த சிபிஐ

இதனிடையே, இந்த மதுபானக் கொள்கையில் ஆம் ஆத்மி அரசு கோடிக்கணக்கில் முறைகேடுகளில் ஈடுபட்டிருப்பதாக டெல்லி துணைநிலை ஆளுநர் வினய் குமார் சக்சேனா குற்றம்சாட்டினார். இதன்பேரில் வழக்கு பதிவு செய்த சிபிஐ, டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியாவை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்தது.

அதிரடி கைது

இதையடுத்து, கடந்த மார்ச் 26-ம் தேதி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகிய மணிஷ் சிசோடியாவை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். சிசோடியா கைது செய்யப்பட்டது, மத்திய அரசின் பழிவாங்கும் நடவடிக்கை அர்விந்த் கேஜ்ரிவால் கடுமையாக விமர்சித்தார். மேலும், சிசோடியா கைது நடவடிக்கைக்கு எதிராக டெல்லி முழுவதும் ஆம் ஆத்மி சார்பில் போராட்டங்களும் நடைபெற்றன.

கேஜ்ரிவாலுக்கும் சம்மன்

இந்த சூழலில், டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அர்விந்த் கேஜ்ரிவாலுக்கு தற்போது சிபிஐ சம்மன் அனுப்பி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறைகேட்டில் கேஜ்ரிவாலுக்கு நேரடி தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதால் இந்த சம்மன் அனுப்பப்பட்டிருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கைது ஆவாரா கேஜ்ரிவால்?

அதன்படி, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் நாளை ஆஜராகவுள்ளார். அப்போது அவர் கைது செய்யப்படலாம் என தற்போதே வதந்தி பரவி வருகிறது. இதனால் டெல்லியில் பெரும் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, டெல்லி சிபிஐ அலுவலகம் உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் நூற்றுக்கணக்கான போலீஸாரை மத்திய உள்துறை அமைச்சகம் குவித்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.