சென்னை: ஆணவ கொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்ற வேண்டும் என செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவு வருமாறு;
நாகரீக சமுகமாக வாழும் தமிழ்நாட்டில் இன்றளவும் பல கிராமங்களில், சாதி மறுப்புத் திருமணம் செய்வோர் மீது பல்வேறு வகையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.
சாதி மறுப்புத்திருமணம், மாற்று மத திருமணம், ஒரே சாதியில் பெற்றோர்கள் சம்மதமின்றி காதல் திருமணம் செய்வோரை எல்லாம் ஊரை விட்டுத்தள்ளி வைப்பது, அபராதம் விதிப்பது, கொலை செய்வது போன்ற பல கொடுஞ்செயல்கள், கட்டுப்பாடுகள் இன்றளவும் நடைமுறையில் இருக்கிறது.
சாதியக் கட்டுப்பாடு என்ற பெயரில் அரங்கேற்றப்படும் கொடுமைகள், அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்து வருகிறது. சாதி மறுப்பு திருமணம் செய்தால் ஊருக்குள் நுழையக்கூடாது, அபராதம் செலுத்த வேண்டும் என்பன போன்ற பல கொடுமையான கட்டுப்பாடுகள் உள்ளன.
கடந்த மாதம் (மார்ச் 21) கிருஷ்ணகிரியில் பகலிலேயே ஜெகன் என்ற இளைஞர் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார்.
இன்று (15.04.2023) கிருஷ்ணகிரியில், ஊத்தங்கரை அருகே தண்டபானி என்பவர் சாதி மறுப்புத் திருமணம் செய்ததால் தனது மகன் சுபாஷ் என்பவரையும், தனது தாயாரையும் வெட்டி ஆணவப்படுகொலை செய்துள்ளார். இவரது மருமகளையும் தாக்கியதால், அவர் படுகாயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார்.
இந்த ஆணவப் படுகொலைகளை வன்மையாகக் கண்டிக்கின்றேன். தமிழ்நாடு அரசு மாநிலம் முழுவதிலும், வன்கொடுமைகள் அரங்கேறுவதை தடுக்க சிறப்பு விசாரணைக்குழு அமைத்து கண்காணிக்க வேண்டும்.
ஆணவப்படுகொலைகளை தடுக்க தமிழ்நாடு அரசு தனிச்சட்டம் இயற்றவேண்டும். கிராமங்களில் கட்டுப்பாடுகள் விதிக்கும் சமூக விரோத சக்திகளை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்து, அவர்களுக்கு கடுமையான தண்டனைகள் விதிக்கப்படவேண்டும்.
மாண்புமிகு தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள் இதுபோன்ற சமூகவிரோத சக்திகளை இரும்புக் கரம் கொண்டு அடக்கவேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.