ட்விட்டரை கைப்பற்றியதில் இருந்தே ட்விட்டரில் பல மாற்றங்களைச் செய்திருக்கிறார் எலான் மஸ்க். அதிகப்படியான பயனர்களைத் ட்விட்டர் வசம் ஈர்க்கவும், அதன் மூலம் அதிக வருமானம் ஈட்டவும் முடிவு செய்தார்.
அந்த திட்டத்தின் ஒருபகுதியாக முளைத்தது தான் ட்விட்டரின் ப்ளூ டிக் விவகாரம். ட்விட்டரில் ப்ளூ டிக் வேண்டும் என நினைப்பவர்கள் மாதம் 650 முதல் 900 ரூபாய் வரை செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டது. இது பலரிடையே விவாதத்தை ஏற்படுத்தியது.
அதோடு இந்தாண்டு மார்ச் மாதத்தில் ட்விட்டர் பயனர்கள் இதன்பிறகு 10,000 எழுத்துக்கள் வரை ட்வீட் செய்யலாம் என அறிவித்து இருந்தார், எலான்.
ஆனால், இந்த புதிய அம்சம் எப்போது பயன்பாட்டிற்கு வரும், இது ட்விட்டரின் பொது பயனர்களுக்கும் பொருந்துமா அல்லது புளூ டிக் பயனர்களுக்கு மட்டுமா என்பது கேள்விக் குறியாகவே இருந்தது.
இந்நிலையில் தற்போது புளூ டிக் சப்ஸ்க்ரிப்ஷனின் ஒரு பகுதியாக 10,000 எழுத்துகள் வரை பயனர்கள் ட்வீட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறப்பம்சம் கட்டண பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும்.
இதுமட்டுமில்லாமல், பயனர்கள் தங்களது கருத்துகளுக்கு முக்கியத்துவம் அளிக்க Bold மற்றும் Italics போன்றவற்றையும் பயன்படுத்தலாம் என அறிவித்துள்ளது.
“ட்விட்டரில் எழுதுதல் மற்றும் வாசிப்பு அனுபவத்தை மேம்படுத்துகிறோம். இன்று முதல் Bold மற்றும் Italic வடிவமைப்புடன், 10,000 எழுத்துக்கள் நீளமுள்ள ட்வீட்களை ட்விட்டரில் பதிவு செய்யலாம் ‘’ என ட்விட்டரின் சமூக வலைதள பக்கத்தில் வெள்ளிக்கிழமையன்று பதிவிடப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதத்தில் ப்ளூ டிக் பயனர்கள் 4,000 எழுத்துக்கள் வரை பயன்படுத்தலாம் என ட்விட்டர் அறிவித்து இருந்தது.
ட்விட்டர் அறிமுகப்படுத்தப்பட்ட போது 140 எழுத்துக்கள் மட்டுமே உபயோகப்படுத்தும் வகையில் இருந்தது. அதன் பிறகு இந்த எண்ணிக்கை 280-ஆக உயர்த்தப்பட்டது. தற்போது ப்ளூ டிக் பயனர்கள் 10,000 எழுத்துகள் வரை பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது.
10,000 எழுத்துகள் வரை யார் டைப் செய்யப்போகிறார்கள், `அதுல ஒண்ணுமில்ல, கீழ போட்ரு’ என்பது போல் தான் இருக்கிறது இந்த புதிய அம்சம் என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.