அகமதாபாத்: ஐபிஎல்லில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் சேர அழைப்பு வந்த நிலையில் ஹர்திக் பாண்ட்யா எப்படி குஜராத் அணியில் இணைந்தார் என்பதும், அந்த அணியின் கேப்டன் வாய்ப்பை அவர் பெற்றது எப்படி? என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதில் ஆசிஷ் நெஹ்ரா தான் 100 சதவீதம் பங்கு வகித்த விபரம் தற்போது ஹர்திக் பாண்ட்யாவால் கசிந்துள்ளது.
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கடந்த ஆண்டு புதிதாக 2 அணிகள் அறிமுகம் செய்யப்பட்டன. குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்ட்யாவும், லக்னோ சூப்பர் ஜியாண்ட்ஸ் அணிக்கு கேஎல் ராகுலும் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டனர்.
துவக்க சீசனிலேயே ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. ராகுலின் லக்னோ அணி 3வது இடம் பிடித்தது. இந்நிலையில் நடப்பு சீசனில் பிற டீம்களை போல் குஜராத், லக்னோ அணிகளும் சாம்பியன் பட்டத்தை குறிவைத்து களமிறங்கி உள்ளன.
நடப்பு சீசனில் லக்னோ, குஜராத் அணிகள் 4 போட்டிகளில் விளையாடி 3 வெற்றி ஒரு தோல்வியுடன் 6 புள்ளிகளுடன் முறையே 2வது மற்றும் 3வது இடத்தில் உள்ளன. இந்நிலையில் தான் ஹர்திக் பாண்ட்யா தற்போது குஜராத் அணிக்கான இன்டர்வியூவில் தனது ஐபிஎல் பயணம் குறித்த முக்கிய விபரங்களை பகிர்ந்துள்ளார். அப்போது தான் லக்னோ அணி தன்னை வாங்க விரும்பி போன் செய்து பேசியதை அவர் தெரிவித்துள்ளார். இதுபற்றி ஹர்திக் பாண்ட்யா கூறியதாவது:
ஐபிஎல்லில் புதிய அணிகள் அறிமுகம் செய்யப்பட்டது. அப்போது லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியிடம் இருந்து எனக்கு போன்கால் வந்தது. எனக்கு நன்கு தெரிந்த ஒருவர் (கே.எல். ராகுல்) அணியை வழிநடத்தும் நிலையில் அணியில் சேர அழைத்தனர். என்னை பொறுத்தவரை அது முக்கியமானதாக இருந்தது. ஏனென்றால் நம்மை நன்கு புரிந்து கொண்டவருடன் சேர்ந்து விளையாடுவதை நானும் விரும்பினேன்.
இந்த சந்தர்ப்பத்தில் தான் ஆசிஷ் நெஹ்ரா என்னை அழைத்தார். அப்போது குஜராத் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட உள்ளதாக தெரிவித்தார். இருப்பினும் இது உறுதி செய்யப்படவில்லை எனவும் கூறினார். ஆசிஷ் நெஹ்ராவால் தான் குஜராத் அணிக்கு வந்தேன். என்னுடன் வேலை செய்வது எளிமையானது. என்னை அறிந்த ஒருவருக்கு, நான் என்னவென்று தெரியும். நெஹ்ரா என்னை பற்றி அறிந்து வைத்திருப்பவர்.
மேலும் அந்த காலக்கட்டத்தில் நான் நீண்டநாட்களாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்தேன். இதனால் எனக்கும் ஒரு கம்பேக் தேவைப்பட்டது. நாங்கள் இருவரும் செல்போனில் பேசி முடித்த சில நிமிடங்களில் நெஹ்ரா குறுஞ்செய்தி அனுப்பினார். அதில், நீங்கள் தயாராக இருந்தால் கேப்டன் பதவியை வழங்க தயாராக இருக்கிறோம் என தெரிவித்து இருந்தார்.
இது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. நான் அதனை எதிர்பார்க்கவில்லை. நான் எதற்கும் பின்னாலும் ஓடிய நபராக இருந்ததில்லை. அப்படியாக தானாக இந்த பதவி வந்ததோடு குஜராத்தில் இணைந்தேன்” என தெரிவித்துள்ளார். ஆசிஷ் நெஹ்ரா தற்போது ஹர்திக் பாண்ட்யா வழிநடத்தும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.