ஆமதாபாத்: ” உலகின் நலனுக்காக இந்தியா உருவானது. நமது அறிவை உலக நாடுகளுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்” என ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
குஜராத் பல்கலையில் நடந்த நிகழ்ச்சியில் மோகன் பகவத் பேசியதாவது: உலக நலனை வேண்டி நமது முன்னோர்கள் தவம் செய்ததால், தான் நமது நாடு உருவானது. நமது அறிவை உலகத்துடன் பகிர்ந்து கொள்வது நமது கடமை. உலகளவில், இந்தியாவின் பலமும் கவுரவமும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் நமது அறிவு அமைப்பையும், உலகில் உள்ள அறிவாற்றலையும் ஆய்வு செய்வதன் மூலம் கிடைக்கும் விஷயங்களை உலகிற்கு வழங்க வேண்டும். இந்த அறிவை பற்றி பலருக்கு சந்தேகம் உள்ளது. இதனால், அறிவை உலகிற்கு பகிர்வதற்கு முன்னர், அதனை இந்தியர்கள் கற்க வேண்டும்.
உண்மையான அறிவு உள்ளவர்களும் உள்ளனர். ஆனால், அவர்களைப் பற்றிய அவநம்பிக்கை நம்மிடம் உள்ளது. நாம் முதலில் கடந்த காலங்களில் உள்ளதை படிக்க வேண்டும். அதனை நாம் மீண்டும் கற்றுக் கொள்ள வேண்டும். பின் நாடு, நேரம் மற்றும் சூழ்நிலைக்கு ஏற்ப, இந்திய பாரம்பரியத்தின் முழுமையான அறிவை உலகிற்கு வழங்க வேண்டும்.
ஆயுர்வேதம், யோகா போன்ற இந்திய பாரம்பரியங்களுக்கு உலகளவில் அங்கீகாரம் கிடைத்துள்ளது. அவற்றின் சில அம்சங்களுக்கு சிலர் அங்கீகாரம் பெற முயற்சித்தனர். ஆனால், நாம் அவ்வாறு செய்யவில்லை. புதிய கல்விக்கொள்கையானது புதிய மாற்றத்தை கொண்டு வரும். இவ்வாறு மோகன் பகவத் பேசினார்.
Advertisement