கர்நாடகா தேர்தலை மூன்னிட்டு மூன்றாவது வேட்பாளர் பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
சூடுபிடிக்கும் தேர்தல்
கர்நாடகாவில் தேர்தல் வேலைகள் சூடுபிடித்துள்ளன. வருகிற மே 10ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளநிலையில், சமீபத்தில் வேட்புமனு தாக்கல் தொடங்கியது. மொத்தமுள்ள 224 தொகுதிகளில் 113 இடங்களில் வெல்லும் கட்சியே பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை பிடிக்க முடியும். மே 13ம் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.
தென் மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் ஒரே மாநிலம் என்பதால், கர்நாடகாவில் மீண்டும் ஆட்சியை தக்க வைக்க பல்வேறு வியூகங்களை வகுத்து பாஜக செயல்பட்டு வருகிறது. அதேபோல் இழந்த ஆட்சியை மீண்டும் பெற்றிட காங்கிரஸ் கட்சி தீவிரமாக செயல்பட்டு வருகிறது. கருத்து கணிப்புகளும் காங்கிரஸ் கட்சியே ஆட்சியை பிடிக்கும் என்று கணித்ததால், புது தெம்புடன் அக்கட்சி வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
மூன்றாவது பட்டியல்
அந்த வகையில் கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் 43 வேட்பாளர்கள் அடங்கிய மூன்றாவது பட்டியலை காங்கிரஸ் இன்று வெளியிட்டது. முதல் பட்டியலில் 124 இடங்களும், இரண்டாவது பட்டியலில் மேலும் 42 இடங்களுக்கும் வேட்பாளர்களை அறிவித்த நிலையில் தற்போது மூன்றாவது பட்டியலை வெளியிட்டுள்ளது. இதுவரை 209 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள காங்கிரஸ், மேலும் 15 வேட்பாளர்களின் இடங்களை இன்னும் அறிவிக்கவில்லை.
அதானி சட்டமன்றத் தொகுதியில் பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான லக்ஷ்மண் சவடியை களமிறக்கியுள்ளனர். மே 10 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் வாய்ப்ப்ய் மறுக்கப்பட்டதால், பாஜகவின் முதன்மை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக அறிவித்த லக்ஷ்மண் சவடி, வெள்ளிக்கிழமை காங்கிரஸில் இணைந்தார்.
சித்தராமையாவிற்கு நோ
பெலகாவி மாவட்டத்தில் உள்ள லிங்காயத் தலைவரான லக்ஷ்மண் சவாதி, வெள்ளிக்கிழமை காங்கிரஸ் அலுவலகத்திற்குச் செல்வதற்கு முன்பு சட்டப் பேரவை மற்றும் பாஜகவில் இருந்து ராஜினாமா செய்தார். “இன்று முதல், பாஜகவுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை. 20 முதல் 25 ஆண்டுகள் பாஜகவில் இருந்ததைப் போல, காங்கிரஸின் அர்ப்பணிப்பு மற்றும் விசுவாசமான ஊழியராக இருப்பேன்,” என்று அவர் கூறினார்.
அதேபோல் கோலார் சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் முன்னாள் முதல்வர் சித்தராமையாவை நிறுத்தாமல், அதற்குப் பதிலாக கொத்தூர் ஜி மஞ்சுநாத்தை அந்தத் தொகுதியில் நிறுத்தியுள்ளது காங்கிரஸ். கோலார் சட்டமன்றத் தொகுதியில் இரண்டாவது தொகுதியாக போட்டியிட சித்தராமையா முயன்றார். முன்னதாக அவரது மகன் பிரதிநிதித்துவப்படுத்திய வருணா தொகுதியில் அவரை கட்சி ஏற்கனவே நிறுத்தியுள்ளது. அதேபோல் கும்தா சட்டசபை தொகுதியில் முன்னாள் கவர்னர் மார்கரெட் ஆல்வாவின் மகன் நிவேதித் ஆல்வாவையும் கட்சி நிறுத்தியுள்ளது.