நான் பொறியியல் பட்டதாரி. எனக்குத் திருமணமாகி ஒரு வருடம் ஆகிறது. திருமணத்துக்குப் பின் வேலைக்குச் செல்லவில்லை. கணவரும் பொறியியல் பட்டதாரி, தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிகிறார். என் மாமனார், மாமியாருக்கு என் கணவர் ஒரே பிள்ளை. அனைவரும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். திருமணமாகி ஆறு மாதங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருந்தது. அடுத்த ஆறு மாதங்களில் எனக்கும் மாமியாருக்கும் எப்பொழுது பார்த்தாலும் ஏதாவது மன வருத்தம், வாக்குவாதம், சண்டை, சச்சரவு என்றே போகிறது. எனவே, மாமியாரிடமிருந்து நான் விலக ஆரம்பித்தேன். ஆனால், தாமதமாகத்தான் புரிந்தது எனக்கும் மாமியாருக்கும் சண்டை வரக் காரணமே என் கணவர்தான் என்பது.
என் கணவர் திருமணமான புதிதில், ‘நாம ரெண்டு பேரும் ஜோடியா வெளியே கிளம்பினதும் எங்க அம்மா முகமே சரியில்ல பார்த்தியா?’, ‘எங்கம்மாகிட்ட எனக்கு போனஸ் போட்டதை பத்தியெல்லாம் நான் சொல்லமாட்டேன், நீயும் சொல்லிடாத’, ‘எங்கப்பா காசு விஷயத்துல பெத்த மகனா இருந்தாலும் என்னை நம்பமாட்டார்’ என்றெல்லாம் சொல்லிச் சொல்லி, அவர் பெற்றோர் மீது எனக்கு ஒரு பிம்பத்தையும், அதைவிட முக்கியமாக, அவர்களைவிட அவர் என்னைத்தான் முக்கியமாக நினைக்கிறார் என்ற எண்ணத்தையும் எனக்குள் ஏற்படுத்தினார்.
ஆனால், இதேபோல அவர் என் மாமியாரிடமும், என்னைப் பற்றி அவசியமே இல்லாமல் புகார்கள் சொல்லி, அவர்களிடம் தன்னை நல்ல பிள்ளையாகக் காட்டிக்கொள்வார் என்பதை நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை. சொல்லப்போனால் நானும் என் மாமியாரும் ஆரம்பத்தில் ஒற்றுமையாகவே இருந்தோம். எங்களுக்குள் எந்த போட்டியோ, பொறாமையோ இல்லை. ஒரு கட்டத்தில் அவர் திடீர் திடீரென முகத்தை தூக்கி வைத்துக்கொள்ள ஆரம்பித்தார். என்னவென்று புரியாமல் நான் என் கணவரிடம் வந்து அதைப் பற்றிச் சொல்லும்போது, ’அவங்க இப்படித்தான் யார் மேலயாச்சும், எது மேலயாச்சும் இருக்குற கோபத்தை சம்பந்தமில்லாம நம்மகிட்ட காட்டுவாங்க, நீ என்னனு கேட்டுக்காத’ என்பார்.
இந்நிலையில், சமீபத்தில் இப்படித்தான் ஒரு நாள் என் மாமியார் ஏதோ குத்திக்காட்டுவதுபோலவே என்னிடம் பேசினார். எனக்கு நிஜமாகவே அவர் எது குறித்துப் பேசுகிறார் என்று தெரியவில்லை. என்னவென்று அவரிடமே வெளிப்படையாகக் கேட்டுவிடலாம் என்று, ‘என்னதான் உங்க மனசுல இருக்கு, சொல்லுங்க அத்தை’ என்று கேட்க, இருவருக்கும் இடையே பேச்சு வளர்ந்தது. அப்போது அவர் சொன்ன விஷயங்களைக் கேட்டு நான் அதிர்ச்சியாகிவிட்டேன்.
`என் பையனை ஹாஸ்பிட்டல், கோயில்னு நான் துணைக்குக் கூட்டிட்டுப் போனா உடனே நீ முகத்தை தூக்கி வெச்சுக்கிறீயாம். உன் சொந்தக்காரங்ககிட்ட எல்லாம், நம்ம வீட்டுல உனக்கு ப்ரைவஸியே இல்லைனு புலம்புறியாம். நீ ஊருக்குப் போகும்போது, உன் வார்ட்ரோபை பூட்டி சாவியை என் பையன்கிட்டக்கூட கொடுக்காம எடுத்துட்டுப் போயிடுறியாம். கேட்டா, நீ இல்லாதப்போ யாரோ உன் வார்ட்ரோபை வந்து நோட்டமிடுற மாதிரி இருக்குனு சொல்றியாம். இப்படி என் பிள்ளைகிட்ட ஒண்ணு மாத்தி ஒண்ணு எங்க மேல வெறுப்பு வர்ற மாதிரி சொல்லிட்டே இருக்கே. இதெல்லாம் என் பையன் என்கிட்ட சொல்லும்போது, என்னைவிட, பாவம் அவனை நினைச்சுத்தான் எனக்குக் கவலையா இருக்கு’ என்று சொன்னபோதுதான் புரிந்தது, என் கணவரின் இரட்டை வேடம்.
என் மாமியார் என்னிடம் பட்டியலிட்டு சொன்ன விஷயங்களில் பாதி உண்மை இருக்கிறது, மீதி என் கணவர் சேர்த்துச் சொன்ன பொய்யாக இருக்கிறது. உதாரணமாக, நான் ஊருக்குச் செல்லும்போது, ‘உன் வார்ட்ரோபை பூட்டிட்டுப் போயிடு, இல்லைன்னா எங்கம்மா வந்து நீ புதுசா என்ன வாங்கியிருக்கிறனு எல்லாம் பார்ப்பாங்க’ என்று என்னிடம் சொன்னதே என் கணவர்தான். அதனால்தான் நான் அப்படிச் செய்தேன். இப்படித்தான் ஒவ்வொரு விஷயத்திலும்.
ஊருக்குள், அம்மாவுக்கும் மனைவிக்கும் சண்டை வரக்கூடாது என பாடாய்ப்படும் ஆண்கள் பலர் உள்ளார்கள் அறிவோம். ஆனால், மனைவியை அம்மாவிடமும், அம்மாவை மனைவியிடமும் ‘போட்டுக்கொடுத்து’ இருவருக்கும் தான் நல்லவனாக இருக்க நினைக்கும் ஆண்களும் இருக்கிறார்கள் என்பதை என் கணவர் மூலம் அனுபவபூர்வமாக உணர்ந்தேன்.
என் மாமியார் என்னிடம் புகார்ப்பட்டியலை அடுக்கியபோது, பதிலுக்கு நானும், ‘அதெல்லாம் இருக்கட்டும். உங்களை பத்தி உங்க பையன் என்கிட்ட என்னவெல்லாம் சொல்லியிருக்கார் தெரியுமா?’ என்று நான் அவர் முகத்திரையைக் கிழிக்கவில்லை. அது அவருக்கும் அவர் அம்மாவுக்குமான உறவைச் சிக்கலாக்கிவிடும் என்பதால், ‘அப்படியெல்லாம் நான் சொல்லலை அத்தை, ஒருவேளை உங்களை நான் ஹர்ட் பண்ணியிருந்தா மன்னிச்சுக்கோங்க’ என்று சொல்லி முடித்துக்கொண்டேன். ’எல்லா பிரச்னைக்கும் காரணமே நீங்கதானா? ஏன் இந்த புத்தி?’ என்று என் கணவரிடமும் கேட்கவில்லை. மாறாக, என் கணவர் இன்னும் என்னவெல்லாம் களவாணித்தனம் செய்கிறார் என்று கவனிக்க ஆரம்பித்திருக்கிறேன்.
பெண்ணுக்குப் பெண் எதிரி என்று காலம் காலமாகச் சொல்லப்படுவது உண்மை இல்லை என்று நான் சொல்லமாட்டேன். ஆனால் குடும்பச் பிரச்னைகளில் இதுபோல ஆண்களின் சுயநலமும் இருக்கிறது என்பதும் உண்மையே. அம்மா, மனைவி, சகோதரி, மகள் என இவர்களிடம் தான் நல்ல பெயர் வாங்க, இவர்களுக்குள் சச்சரவுகளைக் கிளப்பிவிடும் என் கணவர் போன்ற ஆண்களை எப்படிக் கண்டுகொள்வது, எப்படி பாடம் புகட்டுவது, எப்படித் திருத்துவது?