ராகுல் காந்தி நாளை கோலார் வருகை: ‘மோடி’ பெயர் குறித்த பேச்சு சர்ச்சையான இடத்திலேயே மீண்டும் உரை

பெங்களூரு: கடந்த நாடாளுமன்றத்தேர்தலின் போது மோடி பெயர் குறித்த பேச்சுக்காக நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, எம்.பி. பதவி தகுதி இழப்புக்கு ஆளான கோலார் பகுதியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ராகுல் காந்தி மீண்டும் உரையாற்ற இருப்பதாக காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சி தகவலின்படி,”இந்திய தேசிய காங்கிரஸின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஞாயிற்றுக்கிழமை காலையில் பெங்களூரு வருகிறார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து கோலாருக்கு பயணமாகிறார். அங்கு கட்சியின் ‘ஜெய் பாரத்’ பேரணியில் பங்கேற்று பேசுகிறார்.

மாலையில், பெங்களூரு பிசிசி அலுவலகம் அருகில் புதிதாக கட்டப்பட்டுள்ள இந்திரா காந்தி பவனை திறந்து வைக்கிறார். அலுவலகம் மற்றும் அரங்கமாக கட்டப்பட்டுள்ள இதில் சுமார் 750 பேர் அமரலாம்.

இந்த விழாவில், இந்திய தேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, கர்நாடகாவின் பொறுப்பு பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சுர்ஜ்வாலா, மாநில காங்கிரஸ் தலைவர் டிகே சிவக்குமார், முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்ட பல்வேறு மூத்த தலைவர்கள் கலந்துகொள்ள உள்ளனர்.

கோலாரில் ஏப்.5 ம் தேதி நடக்க இருந்த பேரணி, கர்நாடகா சட்டப்பேரவைத் தேர்தல் வேட்பாளர்கள் தேர்வு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் ஏப்.9-ம் தேதிக்கு மாற்றப்பட்டு இறுதியாக ஏப்.16ம் தேதி நடக்க இருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, கடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது, இதே கோலாரில் நடந்த கூட்டத்தில் மோடி பெயர் குறித்து ராகுல் காந்தி பேசிய சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பாக தொடரப்பட்ட குற்றவியல் வழக்கில் சூரத் நீதிமன்றம் கடந்த மார்ச் 23 ஆம் தேதி ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதற்கு அடுத்த நாள் தகுதி இழப்பு நடவடிக்கைக்கு உள்ளானார்.

இதற்கிடையில், அடுத்த மாதம் 10 ஆம் தேதி கர்நாடகாவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ராகுலின் கோலார் வருகை கட்சிக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே, மைசூரு மாவட்டம் வருணா தொகுதியில் போட்டியிட முன்னாள் முதல்வர் சித்தராமையா பதிவு செய்துள்ள நிலையில், தனது இரண்டாவது தொகுதியாக கோலார் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.