சென்னை: தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு மீண்டும் மெல்ல அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், தினசரி வைரஸ் பாதிப்பு பல வாரங்களுக்குப் பின் மீண்டும் 500ஐ தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பில் இதுவரை 3 அலைகள் ஏற்பட்டுள்ளது. இதில் இரண்டாவது அலையில் தான் வைரஸ் பாதிப்பு மிக மோசமாக இருந்தது. அப்போது கொரோனா பெட்கள் கூட போதியளவில் இல்லாமல் இருந்தது.
அதன் பின்னர் கொரோனா வேக்சின் உட்பட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளால் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்தது. அதன் பின்னர் வைரஸ் பாதிப்பு வெகுவாக குறைந்தது.
கொரோனா பாதிப்பு: இதனால் கொரோனாவுக்கு போடப்பட்ட கட்டுப்பாடுகளும் மெல்ல படிப்படியாக நீக்கப்பட்டன. இதற்கிடையே மாநிலத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மாநிலத்தில் இப்போது பரவும் புதிய வகை ஓமிக்ரான் காரணமாகவே வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனிடையே பல மாதங்களுக்குப் பிறகு இப்போது, தினசரி கொரோனா பாதிப்பு 500ஐ தாண்டியுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 5869 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் வெளிநாடுகளில் இருந்து திரும்பிய 9 பேர் உட்பட 502 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 36,01,701ஆக உயர்ந்துள்ளது.
பாசிட்டிவ் விகிதம்: மாநிலத்தில் இப்போது கொரோனா பாசிட்டிவிட்டி ரேட் 8.4ஆக உள்ளது. அதிகபட்சமாகச் செங்கல்பட்டில் 11.5%, கன்னியாகுமரியில் 11.4%, கோவையில் 11.2% பாசிட்டிவ் ரேட் உள்ளது. சென்னையில் பாசிட்டிவ் விகிதம் 10.2%ஆக உள்ளது.
அதேபோல தமிழகத்தில் ஆக்டிவ் கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து உயர்ந்தே வருகிறது. நேற்று 2876 பேர் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அது 3048ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று ஒரே நாளில் 329 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதன் மூலம் இதுவரை கொரோனாவில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 35,60,598ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா உயிரிழப்பு கடந்த சில நாட்களாக கொரோனா உயிரிழப்புகள் எதுவும் இல்லாத நிலையில், இன்று ஒருவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். திருப்பூரைச் சேர்ந்த ஒருவர் இன்று கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதுவரை தமிழ்நாட்டில் 38,055 கொரோனா உயிரிழப்புகள் பதிவாகியுள்ளது.
மாநிலத்தில் இன்று அதிகபட்சமாகச் சென்னையில் 136 பேருக்கு கொரோனா கண்டறியப்பட்டுள்ளது. அதைத் தவிர வேறு எந்தவொரு மாவட்டத்திலும் தினசரி பாதிப்பு 100ஐ தாண்டவில்லை.
கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இதனால் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்ற போதிலும் மாஸ்க் அணிவது, கைகளை அடிக்கடி கழுவுவது போன்ற பாதுகாப்பு நடவடிக்கையை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளனர்.