திமுகவில் ஜூன் மாதத்துக்குள் புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களை கட்சியில் இணைக்க வேண்டும் என்று தொண்டர்கள், நிர்வாகிகளுக்கு அக்கட்சி தலைமை அறிவுறுத்தியுள்ளது.
கலைஞர் பிறந்தநாளான ஜூன் 3ஆம் தேதிக்குள் இந்த இலக்கை எட்ட அறிவுறுத்தப்பட்டுள்ளது. 234 தொகுதிகளில் ஒவ்வொரு தொகுதியிலும் 50 ஆயிரம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கான வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதனால் 234 தொகுதிகளுக்கும் புதிதாக பார்வையாளர்கள் நியமிக்கபட்டுள்ளனர்.
இளைஞர் அணி, மாணவர் அணி உள்ளிட்ட திமுகவில் உள்ள பல்வேறு அணிகளை சேர்ந்த நிர்வாகிகள் தொகுதி பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த பார்வையாளர்களிடம் முதல்வரும்
தலைவருமான
முகாம் அலுவலகத்திலிருந்து காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
உறுப்பினர் சேர்க்கை எந்தளவு நடந்துள்ளது என்பது குறித்து தொகுதி பார்வையாளர்களிடம் ஸ்டாலின் விசாரித்தார். அதிகளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பதற்கு பொதுமக்களை எவ்வாறு அணுகுவது என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
அப்போது பேசிய அவர், “வரும் மக்களவைத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றிபெற வேண்டும். அது தான் நமது இலக்கு. அதன் அடிப்படையில் உங்கள் பணிகள் இருக்க வேண்டும். உங்கள் பகுதிகளில் புதிய உறுப்பினர்களை சேர்க்கும் போது அரசின் திட்டங்கள், பணிகள் குறித்து எடுத்து சொல்ல ஏற்பாடு செய்ய வேண்டும்.
நீங்கள் தொகுதி பார்வையாளர்களாக பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். இதனால் தொகுதிப் பிரச்சினை குறித்தும் நீங்கள் எனது கவனத்துக்கு கொண்டு வரலாம். இது தொடர்பாக உங்கள் கருத்துக்களையும் தெரிவிக்கலாம்” என்று அவர் பேசினார்.