மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு; சிபிஐ விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் கெஜ்ரிவால்!
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆம் ஆத்மி ஆட்சியில் அரசின் மதுபானக் கொள்கையில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. மதுபானக் கொள்கையில் வியாபாரிகளுக்குச் சாதகமான அம்சங்கள் இருப்பதாகவும், அதற்காக ரூ.100 கோடி வரை ஆம் ஆத்மி தலைவர்களுக்குப் பணம் கைமாறியதாகவும் கூறப்படுகிறது.
அமலாக்கப் பிரிவும், சிபிஐ-யும் இந்தப் புகார் தொடர்பாக வழக்கு பதிவுசெய்து விசாரித்து வருகின்றன. கடந்த பிப்ரவரி மாதம் இந்த வழக்கில் டெல்லியின் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா கைதுசெய்யப்பட்டிருந்தார். அதைத் தொடர்ந்து, அண்மையில் இந்த வழக்கு விசாரணைக்காக அராஜராகுமாறு சிபிஐ தரப்பிலிருந்து முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. இந்த நிலையில், கெஜ்ரிவால் இன்று காலை சுமார் 11 மணியளவில் சிபிஐ விசாரணைக்கு நேரில் சென்று ஆஜராகவிருப்பதாகக் கூறப்படுகிறது.