பெரியார் பல்கலைக்கழக முடிவுக்கு ராமதாஸ் கண்டனம்..!

பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், ’சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் 2023-24 ஆம் கல்வியாண்டில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) என்ற புதிய பாடப்பிரிவு அறிமுகம் செய்யப்படவிருப்பதாக விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. உரிய ஒழுங்குமுறை அமைப்புகளிடமிருந்து எந்த அனுமதியும் பெறப்படாமல், தனியார் மூலம் நடத்தப்படும் இத்தகைய படிப்புகள் மாணவர்களின் எதிர்காலத்தைச் சீரழித்து விடுமோ? என்ற அச்சத்தை அளிக்கிறது.

சேலம் பெரியார் பல்கலைக்கழகமும், ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனமும் இணைந்து இந்த 4 ஆண்டு தொழில்நுட்ப படிப்பை வழங்கவிருக்கின்றன. இப்படிப்பைப் படித்தால் வேலைவாய்ப்பு உறுதி என்றும், 2030 ஆம் ஆண்டுக்குள் 2.36 கோடி வேலைவாய்ப்புகள் உருவாக இருப்பதாகவும் கவர்ச்சியான விளம்பரங்கள் செய்யப்பட்டு வருகின்றன. இம்மெர்சிவ் தொழில்நுட்பம் என்பது நான்காம் தொழில்நுட்ப புரட்சியின் ஓர் உறுப்பு என்பதும், இப்படிப்பைப் படித்தவர்களுக்கு அதிக தேவை இருக்கலாம் என்பதும் உண்மை தான்.

ஆனால், இத்தகையப் படிப்பை வழங்கப் பெரியார் பல்கலைக்கழகத்திற்குத் தகுதி உண்டா? இந்தப் படிப்புக்கு அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதா? இந்தப் படிப்பு பட்ட மேற்படிப்புக்கும், வேலைவாய்ப்புக்கும் தகுதியானது என்று ஒழுங்குமுறை அமைப்புகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதா? என்பன உள்ளிட்ட வினாக்களுக்கு விடை அளிக்காமல் இந்தப் படிப்பை வழங்கப் பெரியார் பல்கலை. முன்வந்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்படும் இரண்டகமும், குற்றமும் ஆகும்.

முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு உயர்கல்விக்கான கொள்கையைத் தெளிவாக வகுத்திருக்கிறது. தமிழக அரசு கொள்கையின் அடிப்படையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகம் கலை மற்றும் அறிவியல் கல்வியை மட்டும் வழங்கும் கல்வி நிறுவனம் ஆகும். கலை மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தால் பி.டெக் எனப் படும் தொழில்நுட்பக் கல்வியை வழங்க முடியாது. தமிழ்நாட்டில் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி வழங்குவதற்காகவே அண்ணா பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டுள்ள நிலையில், அப்பல்கலைக்கழகம் மட்டுமே பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளைக் கற்பிக்க முடியும். பெரியார் பல்கலைக்கழகத்திற்குத் தொழில்நுட்ப கல்வி வழங்கும் தகுதி இல்லை என்பதால், அதனால் வழங்கப்படும் பி.டெக் பட்டம் செல்லாது.

இரண்டாவதாக, அனைத்து வகையான பொறியியல் மற்றும் தொழில்நுட்ப படிப்புகளுக்கும் ஏ.ஐ.சி.டி.இ எனப்படும் அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் ஓப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இந்தப் படிப்புக்கு அத்தகைய ஒப்புதல் எதையும் தொழில்நுட்பக் கல்விக் குழுவிடமிருந்து பெரியார் பல்கலை. பெறவில்லை. அதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் ஆட்சிக்குழு, கல்வி நிலைக்குழு ஆகியவற்றின் அனுமதி கூறப் பெறப்படவில்லை என்று தெரிகிறது. பல்கலைக்கழக அமைப்புகள், தொழில்நுட்பக் கல்விக் குழு ஆகியவற்றின் ஒப்புதல் பெறப்படாத எந்த படிப்பும் சட்டத்திற்கு எதிரான படிப்பாகவே பார்க்கப்படும்.

மூன்றாவதாக, இந்தப் படிப்பை வழங்குவது பெரியார் பல்கலைக்கழகம் அல்ல. ஸ்கோபிக் எஜுடெக் என்ற தனியார் நிறுவனம் தான். மாணவர் சேர்க்கை உள்ளிட்ட அனைத்து நடைமுறைகளையும் தனியார் நிறுவனம் தான் மேற்கொள்ளும். மாணவர்களிடமிருந்து பல்வேறு தலைப்புகளில் கட்டணம் தண்டல் செய்யும் தனியார் நிறுவனம், அதில் கல்விக் கட்டணமாகப் பெறப்படும் தொகையில் மட்டும் ஒரு பகுதியைப் பெரியார் பல்கலைக்கழகத்திற்கு வழங்கிவிட்டு மீதமுள்ள தொகையை முழுமையாக எடுத்துக் கொள்ளும். அதற்காகப் பல்கலைக்கழகத்தின் பெயரையும், கட்டமைப்பு வசதிகளையும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும். இத்தகைய முறை அனுமதிக்கப்பட்டால் அரசு பல்கலைக்கழகங்கள் தனியார்மயமாக்கப்படும்.

நான்காவதாகக் கட்டணக் கொள்ளை. இந்தியாவின் மிக உயர்ந்த தொழில்நுட்பக் கல்வி நிறுவனமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரியில் கூட பொறியியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்குக் கல்விக்கட்டணமாக ரூ.12,000 உட்பட ஒட்டுமொத்தமாகவே ரூ.30,000 மட்டும் தான் ஆண்டுக் கட்டணமாகத் தண்டல் செய்யப்படுகிறது. ஆனால், பெரியார் பல்கலைக்கழகத்தில் பி.டெக் (இம்மெர்சிவ் தொழில்நுட்பம்) படிப்புக்காக ஆண்டுக்கு சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணமாகப் பெறப்படவிருப்பதாகக் கூறப்படுகிறது. இது மிகப்பெரிய கல்விக் கொள்ளை ஆகும். தனியார் நிறுவனத்தின் கல்விக் கொள்ளைக்காகப் பெரியார் பல்கலைக்கழகம் பயன்படுத்தப்படுவதை அரசு அனுமதிக்கக்கூடாது.

ஐந்தாவதாக, ஒரே வளாகத்தில் அனைத்து படிப்புகளும் என்பது மத்திய அரசு வகுத்துள்ள புதிய கல்விக் கொள்கையின் கரு ஆகும். இந்தக் கொள்கையைத் தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அத்தகைய சூழலில், தமிழக அரசின் கொள்கைக்கு எதிரான நிலைப்பாட்டைப் பெரியார் பல்கலைக்கழகம் எடுத்திருப்பது தமிழ்நாடு அரசுக்கு விடப்படும் அறைகூவல் ஆகும். இதைத் தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

இவை அனைத்தையும் கடந்து, உரிய ஒப்புதல் பெறாமல் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் இந்தப் படிப்பு செல்லாது என்று அறிவிக்கப்பட்டால், அதைப் படித்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும். எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை தலையிட்டு பல்கலைக்கழகத்திற்கு உரிய அறிவுரைகளையும், மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களையும் வழங்க வேண்டும். பல்கலைக் கழகங்கள் தனியார் நிறுவனங்களுடன் இணைந்து கல்வியை வணிகமாக்குவதையும் தடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.