கலிபோர்னியா: நடப்பு ஆண்டின் இறுதியில் ஐபோன் 15 மாடல் போன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வரும் சூழலில் ஐபோன் 15 அறிமுகத்திற்கு பிறகு சில பழைய ஐபோன் மாடல்களின் விற்பனையை நிறுத்த ஆப்பிள் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. சந்தையில் புதிய மாடல்களை அறிமுகம் செய்யும்போது பழைய போன்களின் விற்பனையை ஆப்பிள் நிறுத்துவது வழக்கம் என சொல்லப்படுகிறது.
ஐபோன் 15 சீரிஸ் அறிமுகத்திற்குப் பிறகு ஐபோன் 12, ஐபோன் 13 மினி, ஐபோன் 14 புரோ, ஐபோன் 14 புரோ மேக்ஸ் போன்ற போன்களின் விற்பனையை நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதே நேரத்தில் சில மாடல்களின் விலையை குறைக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த வகையில் ஐபோன் 14, ஐபோன் 14 பிளஸ் போன்ற மாடல்களின் விலை குறையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 12-க்கு மாற்றாக ஐபோன் 14 விற்பனை சந்தையில் மேற்கொள்ளப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
ஐபோன் 15 சீரிஸ் வரிசையில் ஐபோன் 15, 15 பிளஸ் மாடல் போன்கள் ஏ16 பயோனிக் சிப்செட் கொண்டிருக்கும் எனக் கூறப்படுகிறது. ஐபோன் 15 புரோ மற்றும் 15 புரோ மேக்ஸ் மாடல்களில் ஏ17 பயோனிக் சிப்செட் இடம்பிடித்துள்ளதாகவும், ஐஓஎஸ் 17 இயங்குதளத்தில் இந்த மாடல்கள் இயங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2007-ல் ஆப்பிள் நிறுவனம் முதல் ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் உலக சந்தையில் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது. இருந்தாலும் உலக அளவில் ஸ்மார்ட்போன் வருவாயில் 50 சதவீதத்தை ஆப்பிள் நிறுவனம்தான் ஈட்டி வருவதாக கடந்த ஆண்டு வெளியான தரவுகள் சொல்கின்றன.