திருவின் குரல்
நடிகர் : அருள்நிதி, ஆத்மிகா, பாரதிராஜா
இயக்குநர் : ஹரிஷ் பிரபு
இசை: சாம் சி.எஸ்
சென்னை : அருள் நிதி,பாரதிராஜா நடிப்பில் தமிழ் புத்தாண்டுக்கு வெளியானத் திரைப்படம் திருவின் குரல்.
ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அரசு மருத்துவமனையில் நடக்கும் அட்டூழியங்களை வேறு ஒரு கோணத்தில் சொல்லி இருக்கும் இப்படத்தின் விமர்சனத்தைப் பார்க்கலாம்
திருவின் குரல் : இப்படத்தின் கதாநாயகனான அருள்நிதி வாய் பேச முடியாத, காதும் சரியாக கேட்காத சிவில் இஞ்சினியரிங் படித்த இளைஞராக நடித்துள்ளார். இவர் அப்பா பாரதிராஜாவுடன் இணைந்து சின்ன சின்ன பில்டிங் காண்டிரக்ட் எடுத்து வேலை செய்து வருகிறார். திடீரென ஒரு நாள் பாரதிராஜா மீது சிமெண்ட் மூட்டை விழுந்து தலையில் அடிபட்டுவிட அரசு மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார். அங்கு லிப்ட் ஆப்ரேட்டாக இருக்கு அஷ்ரப், வார்டு பாய், செக்யூரிட்டி, மார்ச்சூரி ஊழியர்கள் என பேருடன் அந்த மருத்துவமனையில் கொலை, கொள்ளை பல அட்டூழியங்களை செய்து வருகின்றனர்.
படத்தின் கதை :அந்த கும்பல் செய்யும் ஒரு கொலையை அருள்நிதியின் உறவுக்கார பெண் பார்த்துவிட, அந்த பெண்ணை கொலை செய்ய பல திட்டங்களை போடுகிறது அந்த கும்பல். அரசு மருத்துவமனையில் அட்டகாசம் செய்யும் அந்த கும்பல் யார்? அந்த கும்பலிடம் இருந்து அந்த பெண் தப்பித்தாரா இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் பலம் : அந்த படத்தில் இருக்கும் அனைத்து கதாபாத்திரங்களும் தங்களது கதாபாத்திரம் உணர்ந்து நடித்துள்ளனர். குறிப்பாக அருள்நிதி வழக்கம் போல தனது கதாபாத்திரத்தை நிறைவாக செய்து இருக்கிறார். வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளினி கேரக்டரில் முகபாவம், நடிப்பு என அனைத்தும் ரசிக்கும் படி இருந்தது.இதுதான் இந்தபடத்தின் மொத்த பலமாக இருந்தது. மேலும், அரசு மருத்துவமனையில் நடக்கும் நடக்கும் சில அலட்சியங்களை இயக்குநர் அப்பட்டமாக காட்டி இருக்கிறார் இயக்குநர். சில காட்சிகள் புதுசாக இருந்தது.
மைனஸ் : திறமையான நடிகரான பாரதிராஜாவை படம் முழுக்க படுத்தப்படுக்கையாக்கி படம் பார்ப்பவர்களை டென்ஷாக்கி என்னடா பாரதிராஜாவுக்கு வந்த சோதனை என சொல்லவைத்துள்ளது. அதே போல அருள்நிதியில் அத்தைப்பெண்ணாக வரும் ஆத்மிகாவும், ஒரே ஒரு டூயட் பாடலுக்கு வந்து விட்டு காணாமல் போய்விட்டார்.
சம்பளத்திற்காக : இசையமைப்பாளர் சாம் சிஎஸ்சி இசை பாராட்டும் வகையில் இல்லை என்றாலும் மோசமாக இல்லாமல் பரவால என்று சொல்லலாம், ஒளிப்பதிவாளர் சின்டோ பொடுதாஸ் குளோசப் காட்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்திருக்கிறார். மற்றபடி அனைத்து டெக்னிசீனியர்களும் சம்பளம் வாங்கிவிட்டோம் எதையாவது செய்து தான் ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் வேலை செய்தது போல இருந்தது.
கூக்குரல் : படத்தின் ஆரம்பக்காட்சி எதார்த்தமாக தொடங்கி கதை நகர நகர லாஜிக்கை மீறி மனதிற்குள் ஒருவித பயத்தை ஏற்படுத்திவிடுகிறது. அருள்நிதி படம் என்றாலே அந்த படத்தில் சுவாரஸ்யமான ஒரு விஷயம் நிச்சயமாக இருக்கும் அதுபோன்ற கதையைத்தான் அவரும் தேர்வு செய்து இதுநாள் வரை நடித்து வந்தார். ஆனால், இந்த படத்தில் அருள்நிதி கதையை கோட்டைவிட்டுவிட்டார். மொத்தத்தில் திருவின் குரல்… கூக்குரலாக உள்ளது.