குவைத்: உலகின் மிக உயரமாக கட்டிடமாக துபாயின் புருஜ் கலிபா உள்ள நிலையில், அதைவிட உயரமான கட்டிடத்தை குவைத் நாடு கட்ட இருப்பதாக அறிவித்து இருக்கிறது. ஒரு கிலோ மீட்டர் உயரத்திற்கு எழுப்பப்பட உள்ள இந்த கட்டிடத்தை கட்ட 1.2 பில்லியன் டாலரை குவைத் செலவிட இருக்கிறது.
உலக நாடுகளிலேயே அதிக மதிப்பு கொண்ட தினாரை பயன்படுத்தி வரும் குவைத்தும் மற்ற அரபு நாடுகளை போன்றே எண்ணெய் வளத்தால் செல்வ செழிப்புமிக்க நாடாக உயர்ந்து இருக்கிறது. தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சுற்றுலா துறையில் அதிக கவனம் செலுத்தி வருகிறது.
அந்த வழியை சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுளை பின்பற்றி சுற்றுலா துறைக்கு அதிக முக்கியத்துவம் தர தொடங்கி உள்ளார்கள். அந்த வரிசையில் குவைத்தும் இணைந்து இருக்கிறது. ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பல்வேறு திட்டங்களை அந்நாட்டு அரசு செயல்படுத்த தொடங்கி இருகிறது.
துபாயில் உள்ள உலகின் உயரமான கட்டிடமான புருஜ் கலிபாவால்தான் அந்நாட்டு தற்போது சுற்றுலா துறையில் அபிரிமிதமான வளர்ச்சியை அடைந்து உள்ளதை பின்பற்றி சவூதியும் குவைத்தும் அதே பாணியை பின்பற்ற தொடங்கி உள்ளன. அந்த வகையில் சவூதியையும் புரூஜ் கலிபாவைவிட 2 கிலோ மீட்டர் உயர்ந்த கட்டிடத்தை கட்ட கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவு செய்தது.
அதேபோல் தற்போது குவைத்தும் ‘புருஜ் முபாரக் அல்-கபீர் ‘ என்ற உயரமான கட்டிடத்தை எழுப்ப திட்டமிட்டு உள்ளது. இது குறித்து அந்நாட்டு அரசு தெரிவித்து இருப்பதாவது, ஒரு கிலோமீட்டர் உயரம் கொண்ட இந்த கட்டிடம் குவைத்தின் சில்க் சிட்டியின் முக்கிய ஈர்ப்பாக அமையும். 1.2 பில்லியன் டாலர் செலவில் அமைக்கப்படும் இந்த வானுயர்ந்த கட்டிடம் 1,001 மீட்டர், அதாவது 1 கிலோ மீட்டர் உயரம் கொண்ட உலகின் முதல் கட்டிடமாக இருக்கும்.
இதுகுறித்து கட்டுமான நிறுவனமான தம்டீன் குழுமம் தெரிவிக்கையில், இந்த கோபுரம் குவைத் நகரின் சுபியா பகுதியில் அமைந்துள்ள “சிட்டி ஆஃப் சில்க்” எனப்படும் மதீனத் அல்-ஹரீர் பகுதியின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் என்று கூறி இருக்கிறது. 250 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் இந்த வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் பொழுதுபோக்கு வசதிகள், பெரிய பூங்கா ஆகியவையும் அத்துடன் அமைக்கப்பட உள்ளன.
புர்ஜ் முபாரக் அல்-கபீர் கட்டிடத்தை ஸ்பெயினை சேர்ந்த கட்டிடக் கலைஞரான சாண்டியாகோ கலட்ராவாவா வடிவமைத்து இருக்கிறார். இதனை கட்டி முடிக்க சுமார் 25 ஆண்டுகள் ஆகும் என்று கூறப்படுகிறது. ஒரு பாரம்பரிய இஸ்லாமிய மினாராவின் வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு இந்த கோபுரம் வடிவமைக்கப்பட்டு உள்ளதாம். இது ஒரு மெல்லிய கத்தி போன்ற வடிவம் மேல் நோக்கித் செல்வதைபோல் வடிவமைத்து உள்ளார்கள்.
இந்த வான் உயர்ந்த கட்டிடத்தில் உணவகங்கள், விடுதிகள், அலுவலகங்கள், குடியிருப்புகள், கண்காணிப்பு தளங்கள், சில்லறை மற்றும் வணிக வளாகங்கள் என பல்வேறு வசதிகளைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குவைத்தின் லட்சியத்தை அடைவதற்கான சின்னமாகவும் அந்நாட்டின் முன்னேற்றத்திற்கான அடையாளமாகவும் இது இருக்கும் என்று அந்நாட்டு அரசு நம்புகிறது.
குறிப்பாக முக்கியமான சுற்றுலா தலமாகவும் உலக அளவில் இது உருவெடுக்கும் என்பது நம்பப்படுகிறது. புர்ஜ் முபாரக் அல்-கபீர் கோபுரம் மற்றும் மதீனத் அல்-ஹரீர் திட்டங்கள், எண்ணெய் ஏற்றுமதியை மட்டும் நம்பி இருக்கும் குவைத்தின் பொருளாதாரத்திற்கு பல வழிகளில் கதவுகளை திறந்துவிடும். குறிப்பாக இந்த திட்டம் அந்நாட்டில் ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதுடன் கணிசமான வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அரபு நாடுகளிலை பொறுத்தவரை 828 மீட்டர் உயரத்தில் உள்ள துபாயில் இருக்கும் புர்ஜ் கலீஃபா உட்பட உலகின் மிக உயர்ந்த வானளாவிய கட்டிடங்கள் உள்ளன. சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் 2 கிலோ மீட்டர் உயரமான வானுயர்ந்த கட்டிடத்தை கட்ட திட்டமிட்டுள்ளது. 2030 திட்டத்தின் கீழ் அமைக்கப்படும் அந்த கட்டிட பணிகள் நிறைவடையும்போது அது உலகின் மிக உயரமான கட்டிடமாக மாறும் என்று கூறப்படுகிறது.