அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெறும் டெல்லியில், ஆளுங்கட்சிக்கும் துணை நிலை ஆளுநருக்குமான மோதலுக்கிடையில், மாநில மதுபானக் கொள்கை (கலால் கொள்கை) ஊழல் பிரச்னை எழுந்தது. இந்த விவகாரத்தில், துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியா கைதுசெய்யபட்டு சிறையிலடைக்கப்பட்டார். அதே போல இதற்கு முன்னதாக, சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த சத்யேந்தர் ஜெயினும் பண மோசடி வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டார்.
அதன் தொடர்ச்சியாகத் தற்போது, மதுபானக் கொள்கை தொடர்பாக இன்று விசாரணைக்கு ஆஜராகுமாறு கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியது. இந்த நிலையில், `என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம்’ என சிபிஐ அலுவலகத்தில் இன்று ஆஜராவதற்கு முன்பு தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் வீடியோ ஒன்றில், “நாம் எந்தத் தவறும் செய்யாத நிலையில், மறைப்பதற்கு என்ன இருக்கிறது… எல்லா கேள்விகளுக்கும் உண்மையாகப் பதில் சொல்கிறேன். அவர்கள் (பாஜக) மிகவும் அதிகாரமுடையவர்கள். குற்றவாளியா, இல்லையா என்பதைப் பொருட்படுத்தாமல், யாரை வேண்டுமானாலும் அவர்கள் சிறையிலடைக்கலாம். நேற்றுமுதல் அவர்கள் அனைவரும் `கெஜ்ரிவாலைக் கைதுசெய்வோம்’ எனக் கூறி வருகின்றனர். ஒருவேளை என்னைக் கைதுசெய்ய சிபிஐ-க்கு பா.ஜ.க உத்தரவிட்டிருக்கலாம். அப்படி பா.ஜ.க உத்தரவிட்டிருந்தால், சி.பி.ஐ அதன்படிதான் நடக்கும்.
இந்த நாட்டை நான் மிகவும் நேசிக்கிறேன். நாட்டுக்காக நான் இறக்கவும் தயார். வருமான வரித்துறையில் நான் கமிஷனராக பணியாற்றியிருக்கிறேன். நான் நினைத்திருந்தால், கோடிக்கணக்கில் சம்பாதித்திருக்கலாம். நான் ஊழல்வாதி என்றால், இந்த உலகில் நேர்மையானவர்கள் அல்ல. என்னைக் கைதுசெய்வதால் அவர்கள் என்ன சாதிக்கப் போகிறார்கள். நாட்டின் பிரச்னைகள் தீர்ந்துவிடுமா… எல்லோருக்கும் கல்வி, வேலைவாய்ப்பு கிடைத்திடுமா… ஆனால், உங்களின் (பாஜக) ஈகோவை திருப்தி படுத்திக்கொள்ள முடியும்” என்றார்.