ரோசியோ,-இந்தியாவில் மோசடி வழக்கில் தேடப்படும் வைர வியாபாரி மெஹுல் சோக்சியை, ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருந்து வெளியேற்ற அந்த நாட்டு உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மஹாராஷ்டிர மாநிலம் மும்பையைச் சேர்ந்த வைர வியாபாரிகளான நிரவ் மோடி மற்றும் அவருடைய உறவினர் மெஹுல் சோக்சி மீது, பஞ்சாப் நேஷனல் வங்கியில், ௧௩ ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்ததாக, ௨௦௧௮ல் சி.பி.ஐ., வழக்கு பதிவு செய்தது.
இதையடுத்து, இருவரும் வெளிநாடு தப்பிச் சென்றனர். இவர்களை இந்தியாவுக்கு நாடு கடத்தி வருவதற்கான முயற்சியில், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத் துறை ஈடுபட்டுள்ளன.
இதில் மெஹுல் சோக்சி, கரீபிய நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில், ௨௦௨௧ மே ௨௩ம் தேதியன்று தன்னை டொமினிக்கன் நாட்டுக்கு படகில் கட்டாயப்படுத்தி கடத்திச் சென்று வெளியேற்ற முயற்சித்ததாக ஆன்டிகுவா மற்றும் பார்புடா உயர் நீதிமன்றத்தில் மெஹுல் சோக்சி வழக்கு தொடர்ந்தார்.
இந்த விவகாரம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்த உத்தரவிடக்கோரி அவர் வழக்கு தொடர்ந்திருந்தார். இதை விசாரித்த அந்நாட்டு உயர் நீதிமன்றம், மெஹுல் சோக்சியை வெளிநாடுகளுக்கு கடத்திச் செல்வதற்கு தடை விதித்து நேற்று உத்தரவு பிறப்பித்தது.
உயர் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் அவரை வெளியேற்றக் கூடாது என்றும், கடத்தல் சம்பவம் தொடர்பாக முழுமையாக விசாரிக்கவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Advertisement