ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் செயல்படும் இளைஞர்கள் குழு ஒன்று, வாரத்தின் 7 நாட்களும், இலவசமாக அசைவ சஹர் சாப்பாடு வழங்கி வருவது கவனத்தை ஈர்த்துள்ளது.
இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் தற்போது நடைபெற்று வருகிறது. அதிகாலையில் தொழுகைக்கு பாங்கு சொல்வதற்கு முன்பாக சாப்பிடும் உணவுக்கு பெயர் தான் சஹர்.
இந்த உணவு தான் சூரிய அஸ்தமனம் ஆகும் வரை, அதாவது நோன்பு திறக்கும் வரை நோன்பு வைப்பவர்களுக்கு தேவையான ஆற்றலை உடலுக்கு தருகிறது.
இந்நிலையில் ரமலான் மாதம் தொடங்கியது முதல் வாரத்தின் 7 நாட்களும், தினமும் 600 பேர் முதல் 700 பேருக்கு இலவசமாக சஹர் சாப்பாடு வழங்கி வருகிறார்கள் ராமநாதபுரத்தை சேர்ந்த ”கொலப்பசி நண்பர்கள் குழுவினர்”.
இலவச சாப்பாடு என்றாலும் அதில் வகை வகையாக அசைவ பதார்த்தங்கள் இடம்பெறுகின்றன. ஒரு நாள் மட்டன், ஒரு நாள் சிக்கன், ஒரு நாள் மீன், ஒரு நாள் சாம்பார் கோழி கிரேவி, ஒரு நாள் நெய் சோறு, என வாரத்தின் அனைத்து நாட்களும் அசைவ சாப்பாடு தான்.
ராமநாதபுரத்தில் வேலை நிமித்தமாக தங்கியிருக்கும் வெளியூர்காரர்கள், மருத்துவமனையில் நோயாளியை பராமரிப்பதற்காக உடன் இருப்பவர்கள், இரவு நேர பயணிகள், வீட்டில் சஹர் உணவு சமைக்க ஆள் இல்லாதவர்கள் என 600 பேருக்கும் குறையாமல் சஹர் சாப்பாடு கொடுக்கப்படுகிறது.
கொலப்பசி நண்பர்கள் குழுவில் இடம்பெற்றுள்ள 50 நபர்களும் வேறு வேறு வேலைகள் பார்த்து வருகிறார்கள். பகலில் அவரவர் பணிகளை பார்க்கச் செல்லும் இவர்கள், இரவு 10 மணியளவில் ஒரு இடத்தில் குழுமி சஹர் சாப்பாடு தயாரிப்பு பணியில் ஈடுபடுகிறர்கள்.
சமைத்த சாப்பாட்டை பார்சல் கட்டி டூவிலர்களில் எடுத்துச் சென்று விநியோகிக்கவும் செய்கிறார்கள். கடந்த 7 ஆண்டுகளாக இந்தப் பணியில் தாங்கள் ஈடுபட்டு வருவதாகவும் இதற்காக நாள் ஒன்றுக்கு ரூ.50,000 முதல் ரூ.1,00000 வரை செலவாவதாகவும் கூறுகிறார்கள்.
இதனிடையே ரமலான் மாதம் முடிய இன்னும் 5 நாட்களே உள்ள நிலையில் ரம்ஜான் பண்டிகையை கொண்டாட இஸ்லாமியர்கள் ஆவலோடு எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.