இந்தூர்: கொரோனாவால் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நபர் ஒருவர், திடீரென மீண்டும் உயிருடன் வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கொரோனா நம்மை 2020இல் தொடங்கி அடுத்த இரண்டு ஆண்டுகள் படாய் படுத்திவிட்டது. அமெரிக்கா தொடங்கி ஆஸ்திரேலியா வரை அனைத்து நாடுகளும் கொரோனாவால் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இந்தியாவிலும் இதுவரை நாம் மூன்று கொரோனா அலைளை எதிர்கொண்டு இருக்கிறோம். அதன் பின்னர் வேக்சின் உள்ளிட்ட பல நடவடிக்கைகளால் நாம் கொரோனாவை கட்டுப்படுத்தினோம்.
கொரோனா பாதிப்பு: இருப்பினும், இந்தியாவில் இரண்டாம் அலையை அவ்வளவு சீக்கிரம் யாரும் மறந்து இருக்க மாட்டார்கள்.. அப்போது பாதிப்பு மிக மோசமானதாக இருந்தது. கொரோனா படுக்கைகள், ஆக்சிஜன் பெட்களுக்கும் தட்டுப்பாடு இருந்தது. உயிரிழப்புகளும் கூட உச்சத்தில் இருந்தது. ஏகப்பட்ட பேர் நாடு முழுக்க கொரோனாவால் உயிரிழந்தார்கள். இதனிடையே மத்தியப் பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் கொரோனாவால் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்ட நபர் இரண்டு ஆண்டுகளுக்குப் பின் இப்போது வீடு திரும்பியுள்ளார்.
35 வயதான கமலேஷ் படிதாரின் குடும்ப உறுப்பினர்கள், அவரது இறுதிச் சடங்குகளை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே செய்துவிட்டனர். இதனிடையே சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, நேற்று சனிக்கிழமை காலை 6 மணியளவில் இவர் கரோட்கலா கிராமத்தில் உள்ள தனது உறவினர் வீட்டிற்குச் சென்று கதவைத் தட்டியுள்ளார். இறந்ததாகக் கருதிய நபர் அதிகாலை நேரத்தில் கதவைத் தட்டியதால் உண்மையில் அவர்கள் பயந்துவிட்டனர். ஏதோ பேய் வந்துவிட்டதாகவே நினைத்துள்ளனர்.
திடீரென உயிர்தெழுந்த நபர்: அதன் பின்னரே அவர்களுக்கு உண்மையில் என்ன நடந்தது என்பது தெரிய வந்துள்ளது. நாட்டில் இரண்டாவது கோவிட் அலை ஏற்பட்ட போது கமலேஷ் படிதார் நோய்வாய்ப்பட்டார். கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டார். அங்கே மருத்துவர்கள் அவருக்குச் சிகிச்சை அளித்த நிலையில், அவர் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
அது மட்டுமின்றி, மருத்துவமனை நிர்வாகம் குடும்பத்தினரிடம் அவரது உடலையும் கொடுத்துள்ளனர். அவரது குடும்பத்தினர் அவருக்கு இறுதிச் சடங்குகளையும் செய்து உடலை நல்லடக்கமும் செய்துள்ளனர். இந்தச் சூழலில் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து மீண்டும் அவரே வந்துள்ளார். அவர் வீடு திரும்பிவிட்ட போதிலும், இரண்டு ஆண்டுகள் எங்கே இருந்தார் என்ன செய்தார் என எதையும் அவர் சொல்லவில்லை. இதனால் அவரது குடும்ப உறுப்பினர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
போலீசார் தகவல்: இது குறித்து கன்வான் காவல் நிலைய பொறுப்பாளர் ராம் சிங் ரத்தோர் கூறுகையில், “கமலேஷ் படிதாருக்கு 2021இல் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அவரை குஜராத் வதோதரா மருத்துவமனையில் அனுமதித்தாக குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், அங்கே சிகிச்சை பலனில்லாமல் அவர் உயிரிழந்துவிட்டார். அதைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த உடலை வைத்து இறுதிச் சடங்குகளையும் இவர்கள் செய்துவிட்டனர்.
அதன் பின்னர் இவர்கள் தங்கள் கிராமத்திற்குத் திரும்பிவிட்டனர். இந்தச் சூழலில் தான் இரண்டு ஆண்டுகள் கழித்து அவர் மீண்டும் இங்கே வந்துள்ளார். அவர் உயிருடன் இருந்தது குடும்பத்தைச் சேர்ந்த யாருக்கும் தெரியாது. இதனால் அவர்களே புரியாமல் தான் இருக்கிறார்கள். அவருக்கு என்ன ஆனது. இத்தனை காலம் எங்கே இருந்தார் என்பத குறித்த தகவல்களை நாங்கள் கேட்டுப் பதிவு செய்ய உள்ளோம்” என்று தெரிவித்தார்.
குற்றச்சாட்டு: கொரோனா 2ஆம் அலை பாதிப்பு மிக மோசமாக இருந்தது. நாடு முழுக்க அப்போது உயிரிழப்புகள் உச்சம் தொட்டது. அப்போது பல உயிரிழப்புகள் முறையாகப் பதிவு செய்யப்படவில்லை என்றெல்லாம் சொல்லப்பட்டது. இந்தச் சூழலில் 2ஆம் அலை சமயத்தில் கொரோனாவால் உயிரிழந்ததாகக் கருதப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்துள்ள சம்பவம் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இது குறித்து போலீசாரும் உரிய விசாரணை நடத்தவுள்ளனர்.