கர்நாடகா தேர்தல்: ‘அதே இடம்.. ஆனா சம்பவம் பெரிசு’.. போட்டு பொளந்த ராகுல் காந்தி.!

பிரதமர் மோடி அதானிக்கு செய்யும் போது, நாங்கள் மக்களுக்கு செய்ய மாட்டோமா என ராகுல் காந்தி பேசியுள்ளார்.

கர்நாடக மாநிலத்தில் வருகிற மே மாதம் 10ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்பட்டு, 13ம் தேதி முடிவுகள் வெளியிடப்பட உள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. மாநிலத்தில் மொத்தம் 224 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. அதில் 113 தொகுதிகளை வெல்லும் கட்சியே பெரும்பான்மை பெற்று ஆட்சியமைக்க முடியும்.

தேர்தலுக்கு முந்தையை பெரும்பாலான கருத்து கணிப்புகள் காங்கிரஸ் கட்சியே வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளன. இதனால் ஆளும் கட்சியான பாஜகவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. களத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளிடையே மும்முனை போட்டி இருந்து வருகிறது. சமீபத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. மாநிலத்தில் தீவிர் சோதனைகள் நடைபெற்று வருகின்றன.

இந்தசூழலில் ராகுல் காந்தி கர்நாடகாவில் இன்று பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். கோலாரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசும்போது, ‘‘காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் 200 யூனிட் இலவச மின்சாரம், பெண்களுக்கு மாதந்தோறும் ரூ.2,000, அனைவருக்கும் 10 கிலோ அரிசி, 2 ஆண்டுகளுக்கு வேலையில்லாத இளைஞர்களுக்கு ரூ.3,000, டிப்ளமோ படித்தவர்களுக்கு 1,500 வழங்கப்படும் உள்ளிட்டவை வழங்கப்படும்.

பிரதமர் மோடி அதானிக்கு முழுமனதுடன் உதவி செய்து வருகிறார். நாங்கள் முழுமனதுடன் கர்நாடகா மக்களுக்கு உதவி செய்வோம். மோடியால் பல ஆயிரம் கோடியை அதானிக்கு கொடுக்க முடியும்போது எங்களால் மக்களுக்கு தர முடியாதா.? அதானிக்கு ஷெல் நிறுவனம் இருப்பதாக நான் நாடாளுமன்றத்தில் கூறினேன்.

20 ஆயிரம் கோடி ரூபாய் யாருக்கு சொந்தம் என்று கேள்வி எழுப்பினேன். வரலாற்றில் முதல்முறையாக பாஜக அரசு நாடாளுமன்றத்தை செயல்பட விடவில்லை. பொதுவாக எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் தடுக்கும். என் மீதான குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு இரண்டு கடிதம் எழுதியிருந்தேன்.

ஆனால் நாடாளுமன்றத்தில் எனக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை, என்னால் எதுவும் செய்ய முடியாது என்று சபாநாயகர் ஓம் பிர்லா சிரித்தார், அவருடன் டீ குடிக்க சொன்னார். நாடாளுமன்றத்தில் என்ன வேண்டுமானாலும் செய்யலாம், ஆனால் ஏன் உங்கள் வேலையை செய்யவில்லை?அதானி விவகாரத்தை நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு பயந்து, அதன் பிறகு, நான் தகுதி நீக்கம் செய்யப்பட்டேன்” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசினார்.

கடந்த 2019ம் ஆண்டு இதே கோலாரில், மோடி என்ற பெயரைக் கொண்டவர்கள் எல்லாம் திருடர்களாகவே இருக்கின்றனர் என ராகுல் காந்தி பேசியதற்கு குஜராத்தில் அவர் மீது அவதூறு வழக்கு தொடரப்பட்டது. அதைத் தொடர்ந்து அவருக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில், ராகுல் காந்தியின் எம்பி பதவி பறிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.