தானே : போதையில் கார் ஓட்டிய நபர், தன்னை சோதனையிட முயன்ற போலீசாரை கார் ஏற்றி கொல்ல முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் மஹாராஷ்டிராவுக்கு வந்தார். இதையொட்டி மும்பையின் கோபர்கைரானே – வாஷி லேன் பகுதியில் சித்தேஷ்வர் மாலி என்ற போலீஸ்கார் உள்ளிட்ட சிலர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சந்தேகத்திற்கு இடமாக அதிவேகமாக வந்த காரை சித்தேஷ்வர் சோதனையிட முயன்றார். திடீரென அந்த டிரைவர், சித்தேஷ்வர் மீது காரை மோத முயன்றார். சுதாரித்த சித்தேஷ்வர் காரின் முன்பகுதியில் உள்ள பானெட் மீது தாவி குதித்து ஏறி உயிர் தப்பினார்.
ஆனாலும் போதை ஆசாமி காரை வேகமாக ஓட்டி சென்றதால் சித்தேஷ்வர் உயிர் பயத்தில் அமர்ந்திருந்தார். 20 கி.மீ., துாரம், அந்த கார் சென்ற பின், மற்ற போலீசார், காரை வழிமறித்து பானெட்டில் அமர்ந்திருந்த சித்தேஷ்வரை மீட்டனர்.
காரை ஓட்டி வந்த நபரை சோதனையிட்டதில் அவர் போதை பொருள் பயன்படுத்தியிருப்பதும், அருந்தியிருப்பதும், அவர் பெயர் ஆதித்ய பெம்ப்டே என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவர் மீது கொலை முயற்சி, அரசு ஊழியரை பணி செய்யவிடாமல் தடுத்தல், அதிவேகமாக காரை ஓட்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்தனர்.
Advertisement