புதுடெல்லி: மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்தி இறங்கியுள்ளார். இவர், மம்தா பானர்ஜி, உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்களை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளார்.
அடுத்த வருடம் வரவிருக்கும் மக்களவை தேர்தலில் பாஜகவிற்கு எதிராக, வலுவான எதிர்கட்சிகள் அணி திரண்டால் தவிர வெல்ல முடியாது என்ற நிலை நிலவுகிறது. இதற்காக, ஐக்கிய ஜனதா தளம் தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார், எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் இரு தினங்களுக்கு முன் டெல்லி வந்திருந்தார். அவருடன், ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலுவின் மகனான தேஜஸ்வீ பிரசாத் யாதவும் உடன் இருந்தார். இருவரும் காங்கிரஸின் தலைவர்களான மல்லிகார்ஜுனா கார்கே மற்றும் ராகுல் காந்தியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
இதன் அடுத்தகட்டமாக, காங்கிரஸ் தலைவர் ராகுலுக்கு, தேசியவாதக் காங்கிரஸின் தலைவர் சரத்பவார் சில ஆலோசனைகள் அளித்துள்ளார். இதன்படி, ராகுல் திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்குவங்க முதல்வருமான மம்தா, மகராஷ்டிராவின் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே உள்ளிட்ட எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரையும் நேரில் சந்தித்து பேச திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.
இந்த சந்திப்பில் ராகுல், எதிர்கட்சித் தலைவர்கள் அனைவரிடமும் நேரடியாக அவர்களின் எதிர்பார்ப்பு என்ன? என்பதை கேட்டறிவார் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் அணியில் காங்கிரஸ் இணைவதை மேற்குவங்க முதல்வரான மம்தா தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இதனால் அவர், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயற்சிக்கும் மூன்றாவது அணியில் சேர ஆர்வம் காட்டி வருகிறார். இதில், உத்தரப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும் சமாஜ்வாதியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் மற்றும் ஆம் ஆத்மியின் அர்விந்த் கேஜ்ரிவால் உள்ளிட்டோரும் ஆதரவு அளித்துள்ளனர்.
இச்சூழலில், ராகுலின் எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பு பலனளிக்குமா? எனும் கேள்வி எழுந்துள்ளது. சமீபத்தில் தம் மீதான ஒரு கிரிமினல் வழக்கில் 2 ஆண்டுகள் தண்டனை அடைந்து தனது எம்.பி பதவியை ராகுல் இழந்தார். அப்போது நடைபெற்ற கூட்டத்தில் பெரும்பாலான எதிர்கட்சிகள் காங்கிரஸுக்கு ஆதரவாக இருந்தனர். இதுபோல், பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிராக ஒன்றிணைய எதிர்கட்சிகள் அனைவரும் தயாராகவே உள்ளனர். இந்த ஒற்றுமை கூட்டணியாகி தேர்தலில் போட்டியிடுமா என்பதுதான் எதிர்கட்சிகள் இடையிலான முக்கிய கேள்வியாக நிற்பதாகக் கருதப்படுகிறது.