லக்னோ: உத்தர பிரதேசத்தில் மே 4, 11 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. ராம்பூர் நகராட்சியின் முன்னாள் தலைவரும் காங்கிரஸ் மூத்த நிர்வாகியுமான மமூன் ஷா கான் மீண்டும் தலைவர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டிருந்தார். ஆனால், ராம்பூர் நகராட்சித் தலைவர் பதவி கடைசி நேரத்தில் மகளிருக்கு ஒதுக்கப்பட்டது.
தேர்தல் ஆணைய முடிவு வெளியான இரண்டே நாட்களில் தீவிர முயற்சி செய்து சனா என்ற பெண்ணை நேற்று திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மமூன் ஷா கான் கூறும்போது, “திருமணம் செய்யாமல் வாழ திட்டமிட்டிருந்தேன். ஆனால் ராம்பூர் நகராட்சித் தலைவர் பதவி திடீரென மகளிருக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது. வேறுவழியின்றி 45 வயதில் அவசரமாக திருமணம் செய்துள்ளேன். எனது மனைவி நகராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவார். காங்கிரஸ் கட்சி சார்பில் சீட் கிடைக்காவிட்டாலும் எனது மனைவி சுயேச்சையாக களத்தில் இறங்குவார்’’ என்று தெரிவித்தார்.