எடப்பாடி பழனிசாமி செய்ய தவறியவை: இனியும் தெற்கு கைகொடுக்குமா? சுய ஆறுதலுக்கு மாநாடா?

அதிமுக அவசர செயற்குழு கூட்டம் நேற்று (ஏப்ரல் 16) சென்னையில் நடைபெற்ற போது பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆகஸ்ட் 20ஆம் தேதி அதிமுக மாநில மாநாடு மதுரையில் நடைபெறும் என்ற அறிவிப்பு தான் தற்போது பேசுபொருளாகியுள்ளது.

“மதுரையில் நடைபெறும் மாநாட்டை மிகவும் எழுச்சியாக நடத்த வேண்டும். அந்த மாநாடு அனைவரும் வியக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை நிர்வாகிகள் செய்திட வேண்டும்” என்று

கூறினார்.

அதிமுகவின் உச்ச பதவியை கைப்பற்றுவதற்காக கிடைக்கும் சமயத்தில் எல்லாம் காய் நகர்த்தி வந்த எடப்பாடி பழனிசாமி முதலில் சசிகலா, டிடிவி தினகரனை கட்சியிலிருந்து நீக்கினார். அதன் பின்னர் ஓபிஎஸ்ஸை இணைத்துக் கொண்டு அவருக்கு துணை முதல்வர் பதவி கொடுத்தார். கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பதவியும் ஓபிஎஸ்ஸுக்கு தரப்பட்டது. ஆனால் கட்சியின் முக்கிய முடிவுகள் அனைத்தையும் எடப்பாடி பழனிசாமியே எடுத்தார். கையெழுத்து போடுவது மட்டுமே ஓபிஎஸ்ஸின் வேலையாக இருந்தது.

ஒரு கட்டத்தில் உட்கட்சி மோதல் தீவிரமடைந்த நிலையில் ஓபிஎஸ்ஸும் அவரது ஆதரவாளர்களும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர். கட்சியின் விதிகளில் மாற்றம் கொண்டு வரப்பட்டு எடப்பாடி பழனிசாமி கட்சியின் உச்ச பதவியான பொதுச் செயலாளர் பதவியில் அமர்ந்தார்.

சசிகலா, டிடிவி தினகரன், ஓபிஎஸ் என முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர்களை கட்சியிலிருந்து நீக்கி விட்டு கொங்கு மண்டலத்தில் செல்வாக்கு செலுத்தும் கவுண்டர் சமூகத்தவர்களுக்கு கட்சியில் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது என்ற பேச்சு அதிமுகவுக்கு உள்ளேயும், வெளியேயும் தொடர்ந்து நிலவி வருகிறது.

இதனால் தென் மாவட்டத்திலும் தங்களுக்கு ஆதரவு இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காக மதுரையில் மாநில மாநாடு நடத்தி பிரம்மாண்ட கூட்டத்தை கூட்ட எடப்பாடி பழனிசாமி தரப்பு கருதுகிறதாம். திருச்சியில் ஏப்ரல் 24ஆம் தேதி ஓபிஎஸ் நடத்தும் மாநாட்டை தூக்கி சாப்பிடும் வகையில் கூட்டம் கூட வேண்டும் என்பது தான் எடப்பாடி பழனிசாமி அதிமுக நிர்வாகிகளுக்கு பிறப்பித்த உத்தரவாம்.

அதிமுக பொதுக்குழு வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு தங்களுக்கு சாதகமாக வந்த போது மதுரை அருகே ஆர்.பி.உதயகுமார் ஏற்பாடு செய்த பிரம்மாண்ட திருமண விழாவில் பங்கேற்றிருந்தார் எடப்பாடி பழனிசாமி. எனவே செண்டிமெண்டாகவும் மதுரையில் மாநில மாநாடு நடத்துவது ஏற்புடையதாக இருக்கும் என அவர் நினைக்கிறாராம்.

எடப்பாடியின் எண்ணவோட்டத்துக்கு செயல்வடிவம் கொடுக்க ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா, நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் தயாராகிவிட்டனர்.

ஆனால் மதுரை வட்டாரத்தில் என்ன பேசிக்கொள்கிறார்காள் என்று விசாரித்தோம். “ஆட்சியில் இருந்தவரை கொங்கு மண்டலத்துக்கு வாரி இரைத்த எடப்பாடி பழனிசாமி இப்போது மட்டும் ஏன் தெற்கு பக்கம் வருகிறார்? ‘மதுரையில் ஒரு பெரிய தொழில் நிறுவனம் கூட இல்லை. எனவே இந்த அரசு எப்படியாவது ஒரு தொழில் நிறுவனத்தை மதுரைக்கு கொண்டு வர வேண்டும்’ என்று பத்தாண்டு காலம் அமைச்சராக இருந்த செல்லூர் ராஜு சட்டசபையில் திமுகவிடம் கோரிக்கை வைக்கிறார்.

ஆட்சியில் இருக்கும் போது மேற்கு மண்டலத்தை மட்டுமே யோசித்ததன் விளைவாக தென் மாவட்டங்களில் அதிமுக பல தொகுதிகளில் தோல்வியைச் சந்தித்தது. இதை நன்கு உணர்ந்த திமுக அரசு மதுரையில் ஐடி கம்பெனிகளை கொண்டு வருதல், மெட்ரோ ரயில் சேவையை தொடங்குதல் என தென் மாவட்டங்களின் வளர்ச்சி குறித்து திட்டம் தீட்டி செயல்படுத்துகிறது.

எடப்பாடி பழனிசாமி இனியாவது தோல்விக்கான காரணங்களை உணர வேண்டும். தன் பக்கத்தில் இருக்கும் சில முன்னாள் அமைச்சர்கள் ஓட்டு போட்டால் மட்டும் வெற்றி கிடைத்துவிடாது. மாநாடு நடத்தி கூட்டத்தை கூட்டினால் அவை எல்லாம் வாக்குகளாக மாறிவிடாது. மக்களின் நம்பிக்கையை பெற வேண்டும். அதுபற்றி அவர் யோசிக்க வேண்டும்’ என்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.