பற்களை பிடுங்கிய பல்வீர் சிங்: மீண்டும் விசாரணையில் இறங்கிய அமுதா ஐஏஎஸ்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் காவல் சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையங்களில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர்களின் பற்களை காவல் துறையினர் பிடுங்கியதாக புகார்கள் எழுந்தன. இதுதொடர்பாக அம்பாசமுத்திரம் ஏஎஸ்பி பல்வீர்சிங் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.

அமுதா ஐஏஎஸ் நியமனம்!

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவத்தை தொடர்ந்து விரிவான விசாரணை மேற்கொள்வதற்காக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை முதன்மை செயலாளரான மூத்த ஐஏஎஸ் அதிகாரி அமுதாவை விசாரணை அதிகாரியாக தமிழ்நாடு அரசு நியமித்தது.

விசாரணைக்கு ஆஜராவதில் தயக்கம்?

அவர் கடந்த 10ஆம் தேதி அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் தனது விசாரணையை தொடங்கினார். ஆனால் அன்றைய தினம் விசாரணைக்கு ஒருவர் கூட ஆஜராகவில்லை. இதனால் அவர் சென்னை புறப்பட்டு சென்றுவிட்டார்.

இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை அதிகாரி அமுதா தனது இரண்டாம் கட்ட விசாரணையை இன்றும் நாளையும் (ஏப்ரல் 17, 18) நடத்துகிறார்.

இன்று மீண்டும் விசாரணை!

“பற்களை பிடுங்கி துன்புறுத்தியதாக வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக விசாரணை அதிகாரியிடம் நேரில் புகார் அளிக்க விரும்புபவர்கள், ஆவணங்கள், தகவல்கள் அல்லது வாக்குமூலங்களை அளிக்க விரும்புபவர்கள் இன்றும், நாளையும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை அம்பாசமுத்திரம் தாலுகா அலுவலகத்தில் ஆஜராகி தெரிவிக்கலாம்.

பாதிக்கப்பட்டு இதுவரை புகார் தெரிவிக்காத நபர்கள் யாரேனும் இருந்தாலும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி புகார் அளிக்கலாம். நேரில் வரமுடியாதவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி மூலமாகவோ அல்லது 82488 87233 என்ற செல்போன் எண்ணை தொடர்பு கொண்டோ புகார் தெரிக்கலாம்” என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.