சென்னை: தமிழகத்தில் கோடைகாலம் தொடங்கிய நிலையில், பல்வேறு நகரங்களில் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரங்களில் வெளியில் செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதியுற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்றும் பல நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாலை 5.30 மணி வரை பதிவான வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி, ஈரோடு ஆகிய இடங்களில் 105 டிகிரி, வேலூரில் 104 டிகிரி, சேலம், திருத்தணி, திருப்பத்தூரில் 103 டிகிரி, மதுரை, திருச்சியில் 102 டிகிரி, சென்னை மீனம்பாக்கம், பாளையங்கோட்டை, தருமபுரியில் 101 டிகிரி, தஞ்சாவூர், கோவையில் 100 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் பதிவாகியுள்ளது. இன்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தைவிட 5 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு கூடுதலாக இருக்கக்கூடும்.
அதேபோல, தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஏப். 17, 18, 19-ம் தேதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப். 20-ம் தேதி ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை, புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.